Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசிய கே.எப்.சி. உணவகங்கள் வாங்க தாய்லாந்து வணிகர் முயற்சி!

மலேசிய கே.எப்.சி. உணவகங்கள் வாங்க தாய்லாந்து வணிகர் முயற்சி!

1250
0
SHARE
Ad

kfc-1கோலாலம்பூர் – மலேசியாவின் உணவுச் சந்தையில் முக்கிய அங்கம் வகிப்பவை கே.எப்.சி (KFC) எனப்படும் துரித உணவுக் கடைகள். கெண்டக்கி பிரைட் சிக்கன் – என்ற பொரித்த கோழித் துண்டுகளை மைய உணவாகக் கொண்ட இந்த உணவகங்கள் மலேசியா முழுவதும் பரவிக் கிடக்கின்றன. நாள்தோறும் கோடிக்கணக்கான ரிங்கிட் விற்பனைகள் இந்த உணவகங்கள் மூலம் நடைபெறுகின்றன.

இந்த உணவகங்களை நடத்தும் உரிமையைத் தற்போது கியூஎஸ்ஆர் (QSR Brands (M) Holdings Sdn Bhd) என்ற நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, புருணை ஆகிய நாடுகளில் சுமார் 750 கேஎப்சி உணவகங்களையும், 450-க்கும் மேற்பட்ட பிசா ஹட் (Pizza Hut) உணவகங்களை மலேசியா, சிங்கப்பூரிலும் நடத்தி வருகிறது.

இந்த கியூஎஸ்ஆர் நிறுவனத்தில் ஜோகூர் கொப்பரேஷன் நிறுவனம் 51 சதவீத பங்குகளையும், சேமநிதி வாரியம் (இபிஎப்) 25 சதவீதப் பங்குகளையும்,  எஞ்சிய 24 சதவீதப் பங்குகளை சிவிசி கேப்பிட்டல் (CVC Capital Partners Ltd) என்ற நிறுவனமும் கொண்டிருக்கின்றன.

Charoen-Sirivadhanabhakdi-Thailand
டான்ஸ்ரீ சாரோன் ஸ்ரீவதனபக்தி
#TamilSchoolmychoice

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னால் தாய்லாந்திலுள்ள கேஎப்சி உணவங்களை வாங்கியிருக்கும் தாய்லாந்து கோடீஸ்வரரான டான்ஸ்ரீ சாரோன் ஸ்ரீவதனபக்தி (Tan Sri Charoen Sirivadhanabhakdi), தற்போது கியூஎஸ்ஆர் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் அதன்வழி மலேசியாவின் கேஎப்சி நிறுவனங்களின் புதிய உரிமையாளராக உருவெடுப்பார் என்றும் வணிக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

தாய்லாந்தின் மூன்றாவது பெரிய கோடீஸ்வரராக சாரோன் கருதப்படுகிறார். இவர் தாய்லாந்தின் தாய் பெவரேஜ் பிஎல்சி (Thai Beverage pcl) என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

chang-beer-logoதாய்லாந்தின் அதிக விற்பனையாகும் பீர் வகைகளில் ஒன்று சாங் பீர் (Chang beer) என்பதாகும். மலேசியாவிலும் இந்த பீர் வகைகள் கிடைக்கின்றன. இந்த பீரைத் தயாரிக்கும் நிறுவனம்தான் தாய் பெவரேஜ் ஆகும்.

வணிக ஊடகங்களின்படி, தாய் பெவரேஜ் நிறுவனம் தாய்லாந்தின் கேஎப்சி உணவகங்களை 340 அமெரிக்க டாலர் விலை கொடுத்து அண்மையில் கையகப்படுத்தியது. இதன்மூலம் தாய்லாந்தின் இயங்கிக் கொண்டிருக்கும் 240 கேஎப்சி உணவகங்களுக்கு உரிமையாளராக இந்நிறுவனம் மாறியது.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தாய் பெவரேஜ் நிறுவனம், கியூஎஸ்ஆர் நிறுனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கி அதன்மூலம் மலேசியாவின் கேஎப்சி நிறுவனங்களை கையகப்படுத்தினாலும், இந்த விற்பனைக்காக அமெரிக்காவின் யம் பிராண்ட்ஸ் (Yum! Brands Inc) நிறுனத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

காரணம், கேஎப்சி உணவகங்களுக்கான வணிக உரிமம், விற்பனை உரிமம் ஆகியவற்றை இந்த அமெரிக்க நிறுவனம் கொண்டிருக்கிறது. கேஎப்சி தவிர, பிசா ஹட் மற்றும் டாகோ பெல் (Taco Bell) ஆகிய உணவுகளின் விற்பனை உரிமங்களையும் யம் பிராண்ட்ஸ் கொண்டிருக்கிறது.