Home தேர்தல்-14 தேர்தல்-14: தே.முன்னணி ஏப்ரல் 15; பக்காத்தான் ஏப்ரல் 25 – வேட்பாளர்கள் அறிவிப்பு

தேர்தல்-14: தே.முன்னணி ஏப்ரல் 15; பக்காத்தான் ஏப்ரல் 25 – வேட்பாளர்கள் அறிவிப்பு

975
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் யார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார், யாருக்கு வாய்ப்பு, யார் வேட்பாளர் பட்டியலில் இருந்து விடுபடப் போகிறார் என்பது போன்ற ஆரூடங்கள் தினமும் பத்திரிக்கைகளில் கொடி கட்டிப் பறக்கின்றன.

இந்நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 15-ஆம் தேதி தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினமே மஇகா வேட்பாளர் பட்டியலும், மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் பட்டியலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், ஏப்ரல் 25-ஆம் தேதி பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என பிகேஆர் கட்சியின் தலைவர் வான் அசிசா அறிவித்துள்ளார்.

தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், அதற்கேற்ப பொருத்தமான எதிரணி வேட்பாளர்களை நிறுத்தும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வியூகமாக இது பார்க்கப்படுகிறது.

வேட்புமனுத் தாக்கலுக்கு மூன்று நாட்கள் முன்பாகத்தான் பக்காத்தான் தனது முழு வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது என்பது சில பரபரப்பு வேட்பாளர்களை முக்கியத் தொகுதிகளில் இறுதி நேரத்தில் நிறுத்தி ஆச்சரியப்படுத்தும் வியூகம் என்றும் கருதப்படுகிறது.

எனினும் தேசிய முன்னணி, பக்காத்தான் ஆகிய இரு தரப்புகளிலும் இடையிடையே சில வேட்பாளர்களின் நியமனங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஏப்ரல் 28-ஆம் தேதியாகும்.