Home நாடு சீனாவில் அச்சடிக்கப்பட்ட தேசிய முன்னணி பதாகைகள்!

சீனாவில் அச்சடிக்கப்பட்ட தேசிய முன்னணி பதாகைகள்!

1291
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய முன்னணிக்கு எதிராக முழங்கப்படும் முக்கியமானக் குறைகூறல்களில் ஒன்று சீனாவுக்கு வாரி வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பெறுமானமுள்ள குத்தகைகள் நியாயமா என்பதுதான்.

அந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் நாடெங்கும் குறிப்பாக, தலைநகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகள் எங்கும் தோரணமாகக் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன, துணியிலான தேசிய முன்னணியின் நீலநிறப் பதாகைகள்.

அந்தப் பதாகைகளைப் பலரும் நின்று பார்த்து ஒரு விஷயத்தைக் குறிப்பாக உற்றுக் கவனித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அந்தப் பதாகை அச்சடிக்கப்பட்டது எங்கே என்பதைக் குறிக்கும் விதமாக “டெக்ஸ்-இபோ ஷங்காய் நிறுவனத்தில் அச்சடிக்கப்பட்டது” என்ற வாசகங்கள் அந்தப் பதாகையிலேயே தெளிவாக பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

இதனைத் தான் பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

இதுபோன்ற சாதாரணமாக துணியில் அச்சடிக்கப்படும் பதாகைகளைத் தயாரித்துத் தரும் உள்நாட்டு நிறுவனங்கள் மலேசியாவிலேயே நிறைய இருக்கின்றன.

ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத் தேர்தல்களில் கூட உள்நாட்டு நிறுவனங்களுக்குக் கூட வாய்ப்பு தராமல், ஆளுங் கட்சியான தேசிய முன்னணியே இங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள சீனா நாட்டிற்குத்தான் அவற்றை அச்சடிக்க குத்தகைக்கு வழங்க வேண்டுமா என்ற நியாயமான கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

சரி! அப்படியே அச்சடித்தாலும், அதனை அந்தப் பதாகையிலேயே போட்டு, சீனாவில் அச்சடிக்கப்பட்டது எனக் காட்டிக் கொள்ள வேண்டுமா?

இதனால், இத்தகையப் பதாகைகளைப் பார்ப்பவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, தேசிய முன்னணிக்கு வரக் கூடிய வாக்குகளும் வராமல் போகுமே தவிர, மற்றபடி சாதகங்கள் எதுவுமில்லை என்பதை இந்தப் பதாகைகளை ஏற்பாடு செய்த தேசிய முன்னணியினர் உணர்ந்திருப்பார்களா?

-இரா.முத்தரசன்