Home நாடு பண்டார் துன் ரசாக்கில் அம்னோ சார்பில் ஷாரிசாட் போட்டி – பிகேஆர் சார்பில் நூருலா?

பண்டார் துன் ரசாக்கில் அம்னோ சார்பில் ஷாரிசாட் போட்டி – பிகேஆர் சார்பில் நூருலா?

1119
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் 14-வது பொதுத்தேர்தலில் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோ மகளிர் அணித் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது.

இதனை அம்னோ தலைமையகம் உறுதிப்படுத்தியிருப்பதாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.

14-வது பொதுத்தேர்தலில், பண்டார் துன் ரசாக் தொகுதியில் போட்டியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்தொகுதியின் அம்னோ தலைவர் ரிசல்மான் மொக்தார், போதை வழக்கில் சிக்கியதால் அந்த வாய்ப்பை இழந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக ஷாரிசாட்டை நிறுத்த அம்னோ தலைமையகம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகின்றது.

53% மலாய்க்காரர்களையும், 37% சீனர்களையும், 9% இந்தியர்களையும், 2% மற்ற இனத்தவர்களையும் கொண்டிருக்கும் பண்டார் துன் ரசாக் தொகுதியில், கடந்த 2008, 2013 ஆகிய இரு தேர்தல்களிலும் பிகேஆர் சார்பில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிம் போட்டியிட்டு அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காலிட் இப்ராகிம் பிகேஆரில் இருந்தும், சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்தும் கடந்த 2014-ம் ஆண்டே விலகிவிட்டதால், இம்முறை பண்டார் துன் ரசாக் தொகுதியில் அவர் பிகேஆர் சார்பில் போட்டியிடப்போவதில்லை.

அதே வேளையில், இம்முறை பண்டார் துன் ரசாக் தொகுதி எல்லை சீர்திருத்தத்திற்குள் வருவதால், வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்படவிருக்கிறது. இவையெல்லாம் பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோவுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது.

ஒருவேளை, பண்டார் துன் ரசாக் ஷாரிசாட் அப்துல் ஜாலில் தான் போட்டியிடுகிறார் என்பது வரும் ஏப்ரல் 15-ம் தேதி அம்னோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உறுதியாகிவிடும் பட்சத்தில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் அங்கு போட்டியிடப்போகும் நிகரான வேட்பாளர் யார்? என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகியிருக்கிறது.

முந்தைய பொதுத்தேர்தல்களின் அடிப்படையில் கணித்துப் பார்த்தால், ஷாரிசாட்டுக்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் நிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.

காரணம், கடந்த 2004-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிட்ட  ஷாரிசாட் அப்துல் ஜாலில் 15,288 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால், 2008-ம் ஆண்டுத் தேர்தலில், அதே லெம்பா பந்தாய் தொகுதியில் நூரு இசா அன்வார் முன் அவரது செல்வாக்கு எடுபடவில்லை. 2,895 வாக்குகள் வித்தியாசத்தில் ஷாரிசாட் தோல்வியுற்றார்.

எனவே, கடந்த இரு தேர்தல்களிலும் பிகேஆரின் அசைக்க முடியாத தொகுதியாக இருந்து வரும் பண்டார் துன் ரசாக்கை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள, மக்கள் செல்வாக்குடைய நூருல் இசா களமிறக்கப்படலாம்.

பக்காத்தான் ஹராப்பானின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்பு வரும் ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

-ஃபீனிக்ஸ்தாசன்