Home நாடு “எனக்கு எதிராக சதி நடந்திருக்கிறது” – போதை வழக்கில் சிக்கிய அம்னோ ரிசல்மான் பேட்டி!

“எனக்கு எதிராக சதி நடந்திருக்கிறது” – போதை வழக்கில் சிக்கிய அம்னோ ரிசல்மான் பேட்டி!

1428
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை ஜாலான் இம்பியில் உள்ள கேளிக்கை மையத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில் பண்டார் துன் ரசாக் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ ரிசல்மான் மோஹ்தார் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 10 பேரின் சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் அனைவரும் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், பிணையில் வெளியே வந்திருக்கும் ரிசல்மான், தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்றும், தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த நடத்தப்பட்டிருக்கும் சதி என்றும் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவருடன் அவரது குடும்பத்தினர், மனைவி, குழந்தைகள் ஆகியோரும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ரிசல்மானுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இதனிடையே, “கேளிக்கை மையத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “நான் காபி குடித்துவிட்டு பாடிக் கொண்டிருந்தேன்” என ரிசல்மான் பதிலளித்தார்.

“இந்தப் பிரச்சினையில் அம்னோ மற்றும் பாரிசானுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லையென நம்புகின்றேன். காரணம் இது என் மீதான தனிப்பட்ட தாக்குதல்” என்றும் ரிசல்மான் தெரிவித்தார்.

தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாகவும் ரிசல்மான் குறிப்பிட்டார்.

14-வது பொதுத்தேர்தலில் அம்னோ சார்பில் ரிசல்மான் போட்டியிடுவார் என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், போதை வழக்கில் அவர் சிக்கியிருப்பது அம்னோ தலைமையை மிகுந்த அதிருப்தியடையச் செய்திருக்கிறது.
ரிசல்மான் மீது கட்சி விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், சட்டப்பூர்வ வழிகளின் மூலம் தனது பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை தான் போக்குவேன் என ரிசல்மான் கூறினார்.