ஜாகர்த்தா – 1 எம்டிபி விவகாரத்தின் மையப் புள்ளியாகத் திகழும் ஜோ லோவுக்கு உரிமையானது என நம்பப்படும் ‘இக்குனாமிட்டி’ என்ற உல்லாசப் படகை இந்தோனிசிய காவல் துறையினர் கைப்பற்றியது சட்டத்திற்குப் புறம்பானது என ஜாகர்த்தாவிலுள்ள வட்டார நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அந்த உல்லாசப் படகைக் கைப்பற்றிய இந்தோனிசியக் காவல் துறை அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்த வழக்கில் உல்லாசப் படகின் உரிமை பெற்ற நிறுவனத்திற்காக வழக்காடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் (எப்.பி.ஐ) உத்தரவின் பேரில் இந்தோனிசியக் காவல் துறையினர் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இந்தப் படகைக் கைப்பற்றினர்.
எனினும், இதற்கான சட்டபூர்வ நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்றப்படவில்லை என்பதால் அந்தப் படகைக் கைப்பற்றியது செல்லாது என ஜாகர்த்தா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் இந்த வழக்கில் உல்லாசப் படகு உரிமையாளரின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.