வாஷிங்டன் – சர்ச்சைக்குரிய வணிகர் லோ தெக் ஜோ, “திருடப்பட்ட, முறைகேடாகப் பெறப்பட்ட” 1எம்டிபி பணத்தில்தான் 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய உல்லாசப் படகை வாங்கினார் என அமெரிக்க நீதித் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
திங்கட்கிழமையன்று (26 மார்ச் 2018) அமெரிக்க நீதித் துறையின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக அந்த ஆவணங்களைப் பார்வையிட்ட மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோனிசியாவின் கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட ஜோ லோவின் இக்குனாமிட்டி உல்லாசப் படகை அமெரிக்க அரசாங்கத்தின் தற்காலிகப் பாதுகாப்பில் வைத்திருக்க அமெரிக்க நீதித்துறை கலிபோர்னியாவில் உள்ள மத்திய வட்டார நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது.
“அமெரிக்க நீதித்துறை சமர்ப்பித்திருக்கும் புகார்களின்படி ஜோ லோ, 1எம்டிபி நிறுவனத்திலிருந்து பில்லியன் கணக்கான பணம் திருடப்பட்டதற்கு முக்கிய நபராகப் பின்னணியில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்தார்” என்றும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அமெரிக்க அரசாங்கம் இக்குனாமிட்டியைக் கைப்பற்றப் போகிறது என்பது நன்கு தெரிந்திருந்த காரணத்தால், இந்த உல்லாசப் படகின் தானியங்கி பயணத் தடங்களுக்கான (automatic identification system) தரவுகளை மறைக்கும்படி ஜோ லோ அந்த உல்லாசப் படகைச் செலுத்தும் மாலுமி குழுவினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய நட்புறவு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்தக் கப்பலை கண்டு பிடிக்க முடியாத சூழலை ஏற்படுத்தினார்” என்றும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்திருக்கிறது.