ஜோகூர் பாரு – முன்னாள் துணைப் பிரதமரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீண்டும் ஜோகூர் மாநிலத்தின் பாகோ தொகுதியிலேயே போட்டியிடுவார் என்பதை பெர்சாத்து கட்சியின் ஜோகூர் மாநிலச் செயலாளர் ஒஸ்மான் சாப்பியான் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 7 தவணைகளாக, தேசிய முன்னணியின் வேட்பாளராக பாகோ தொகுதியை வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் மொகிதின் யாசின், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாகோ வாக்காளர்களுக்கு ஒரு புதிய பரிட்சையை முன்வைக்கப் போகிறார்.
இந்த முறை, பிகேஆர் சின்னத்தில் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளராகத் தன்னை மீண்டும் தேர்ந்தெடுப்பார்களா என்பதுதான் அவர் வைக்கப் போகும் அந்தப் பரிட்சை.
1978 முதல் பாகோ தொகுதியை வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் மொகிதின், 1986 முதல் 1995 வரை ஜோகூர் மாநிலத்தின் மந்திரி பெசாராக பணியாற்றிய காலகட்டத்தில் மட்டும் 2 தவணைகளுக்கு அவர் பாகோ நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. மாறாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
2013 பொதுத் தேர்தலில் 12,842 வாக்குகள் பெரும்பான்மையில் பாகோ தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்ற மொகிதின் யாசின் அப்போது துணைப் பிரதமராகவும் இருந்தார்.
பாகோ தொகுதியோடு, காம்பீர் சட்டமன்றத் தொகுதியிலும் மொகிதின் யாசின் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த முறை ஜோகூர் மாநிலத்தின் புதிய அரசியல் சூழ்நிலையில், மீண்டும் பாகோ மக்கள் மொகிதினைத் தேர்ந்தெடுப்பார்களா என்பதைத் தெரிந்து கொள்ள அரசியல் பார்வையாளர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.