Home நாடு “நான் மைபிபிபி உறுப்பினரா?” சிவராஜ் மறுப்பு

“நான் மைபிபிபி உறுப்பினரா?” சிவராஜ் மறுப்பு

853
0
SHARE
Ad
இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவராஜ்

கோலாலம்பூர் – கேமரன் மலைத் தொகுதிக்கான மஇகா ஒருங்கிணைப்பாளரும், மஇகா இளைஞர் பகுதித் தலைவருமான டத்தோ சிவராஜ் சந்திரன் மைபிபிபி கட்சியின் உறுப்பினர் என, அவரது உறுப்பிய அடையாள அட்டையோடு, மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று கோலாலம்பூரிலுள்ள மஇகா தலைமையகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சிவராஜ், கேவியசின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

“எனது அடையாள அட்டையைப் பயன்படுத்தி யாரோ மைபிபிபி கட்சியில் உறுப்பினராக இணைத்திருக்கிறார்கள். இத்தனை காலம் கழித்து இப்போது மட்டும் இந்தத் தகவலை ஏன் கேவியஸ் வெளியிடுகிறார்? நான் கேமரன் மலையில் போட்டியிடுவதாலா?” என்றும் சிவராஜ் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

“இத்தனை வருடங்களாக நான் இளைஞர் பகுதித் தலைவராக இருந்தபோதும், கடந்த பொதுத் தேர்தலில் புந்தோங் தொகுதியில் நான் போட்டியிட்ட போதும் இதுபோன்ற தகவலை வெளியிடாத கேவியஸ் இப்போது மட்டும் வெளியிடுவதன் உள்நோக்கம் என்ன?” என்றும் சிவராஜ் கேள்வி எழுப்பினார்.

எனினும் தற்போது பொதுத் தேர்தல் நேரமாக இருப்பதால், இந்த விவகாரத்தை மேலும் வளர்க்காமல், கேமரன் மலைத் தொகுதி மஇகாவின் தொகுதி என்பதை ஏற்றுக் கொண்டு, கேவியஸ் தேசிய முன்னணியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றும் சிவராஜ் கேட்டுக் கொண்டார்.

அதே போல, மைபிபிபி வேட்பாளர் சிகாம்புட் தொகுதியில் போட்டியிட்டால் மஇகா கூட்டரசுப் பிரதேச இளைஞர் பகுதியினர் மைபிபிபி வேட்பாளரின் வெற்றிக்காக கடுமையாகப் பாடுபடுவர் என்றும் உறுதியளித்த சிவராஜ், சிகாம்புட் மட்டுமின்றி, எங்கே மைபிபிபி போட்டியிட்டாலும், மஇகா இளைஞர் பகுதி மைபிபிபி வேட்பாளர்களுக்காக உழைக்கும் என்றும் உறுதியளித்தார்.

மைபிபிபி கட்சியில் உறுப்பினராகத் தான் எப்போதுமே எண்ணம் கொண்டதில்லை என்றும், 2005 ஆண்டு முதல் தனது அரசியல் ஈடுபாடும், தொடக்கமும் எப்போதும் மஇகாவுடன்தான் இருந்தது என்றும் சிவராஜ் விளக்கினார்.