Home நாடு நாட்டின் 525-வது தமிழ்ப் பள்ளி தாமான் செந்தோசாவில் உதயமானது

நாட்டின் 525-வது தமிழ்ப் பள்ளி தாமான் செந்தோசாவில் உதயமானது

1020
0
SHARE
Ad
புதிய தாமான் செந்தோசா தமிழ்ப் பள்ளியின் கம்பீரத் தோற்றம்

கிள்ளான் – நாட்டில் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையை 530 ஆக அதிகரிக்கும் தேசிய முன்னணி அரசாங்கம் மற்றும் மஇகாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இன்று புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) காலை, நாட்டின் 525 தமிழ்ப் பள்ளியாக உதயமாகியுள்ள தாமான் செந்தோசா தமிழ்ப் பள்ளியின் கட்டட ஒப்படைப்பு விழா மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

கிள்ளான், கோத்தா ராஜா வட்டாரத்தில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது.

கட்டட ஒப்படைப்பு விழாவில் டாக்டர் சுப்ரா, பி.கமலநாதன், மஇகா கோத்தா ராஜா தொகுதித் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மணியம் ஆகியோருடன் பிரமுகர்கள்

இந்தப் பள்ளியின் கட்டட ஒப்படைப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய டாக்டர் சுப்ரா, “ம இ கா மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களின் மூலம் இந்நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் தோற்றத்தை உருமாற்றுவதில் ம இ கா பெரும் வெற்றி பெற்றிருக்கிறது” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் முதன் முறையாக இந்நாட்டிலுள்ள அரசாங்க முழு உதவிப் பெறும் தமிழ்ப்பள்ளிகளும், பகுதி உதவிப் பெறும் தமிழ்ப்பள்ளிகளும் தோற்றத்தில் உருமாற்றம் கண்டு வருகின்றன என்றும் குறிப்பிட்ட டாக்டர் சுப்ரா,  தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பிரதமர் இதுவரை ஒரு பில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளார் என்பதையும் தனதுரையில் சுட்டிக் காட்டினார்.

தாமான் செந்தோசா தமிழ்ப் பள்ளி வளாகத்தைப் பார்வையிடுகிறார் டாக்டர் சுப்ரா

நாட்டின் 11- வது மலேசியத் திட்டத்தை பிரதமர் சமர்ப்பித்த போது, நாட்டில் ஏற்கனவே 523 தமிழ்ப் பள்ளிகள் இருந்த நிலையில் மேலும் ஏழு புதிய தமிழ்ப் பள்ளிகள் கட்டப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி இன்று நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தாமான் செந்தோசா தமிழ்ப் பள்ளி நாட்டின் 525-வது தமிழ்ப் பள்ளியாகும்.

24 வகுப்பறைகளைக் கொண்ட இப்பள்ளி சுமார் 22 மில்லியன் ரிங்கிட் செலவில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளி இம்மாதம் 23 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படவிருக்கிறது.

தாமான் செந்தோசா தமிழ்ப் பள்ளி கட்டட ஒப்படைப்பு நிகழ்ச்சியில், கல்வித் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், பிரதமர் துறையின் செடிக் தலைமை இயக்குநர் டத்தோ என். எஸ்.இராஜேந்திரன், கோத்தா ராஜா தொகுதி ம இ கா தலைவர் டத்தோ ஆர். எஸ். மணியம், ம இ கா தலைவர்கள், தலைமையாசியர்கள், ஆசிரியர்கள், பள்ளி வாரிய உறுப்பினர்கள், பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.