லாபிஸ் – கடந்த 2013 பொதுத் தேர்தலில் ஜோகூரிலுள்ள லாபிஸ் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு 353 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் செனட்டர் இராமகிருஷ்ணன் இந்த முறை பெக்கோக் சட்டமன்றத் தொகுதிக்கு ஜசெக வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
லாபிஸ் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் பெக்கோக் ஒன்றாகும். மற்றொரு தொகுதி தெனாங் ஆகும்.
2013 பொதுத் தேர்தலில் பெக்கோக் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக வேட்பாளர் வெற்றி பெற்றார். தெனாங் சட்டமன்றத்திற்கு தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளர் பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்த முறை லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் ஜசெக தலைவர் பாங் ஹோக் லியோங் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் லாபிஸ் தொகுதியில் போட்டியிட்டவர் – சொற்ப வாக்குகளில் அந்தத் தொகுதியைத் தவறவிட்டவர் என்ற முறையில், மீண்டும் இராமகிருஷ்ணனை லாபிஸ் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதியான பெக்கோக் தொகுதியில் நிறுத்துவதன் மூலம், லாபிஸ் தொகுதியிலுள்ள கணிசமான இந்திய வாக்குகளைக் கவர ஜசெக வியூகம் வகுத்துள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல்படி இந்தியர்கள் லாபிஸ் தொகுதியில் 14.66 விழுக்காடாக இருக்கின்றனர். 44.96 விழுக்காடு சீன வாக்காளர்களையும், 37.98 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும் லாபிஸ் கொண்டிருக்கிறது.
லாபிஸ் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுவா தி யோங் மீண்டும் இங்கே மசீச-தேசிய முன்னணி சார்பில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.