Home வணிகம்/தொழில் நுட்பம் சீனா நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு – டாயிம் சாடுகிறார்!

சீனா நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு – டாயிம் சாடுகிறார்!

1110
0
SHARE
Ad
டாயிம் சைனுடின் – கோப்புப் படம்

லங்காவி – நீண்ட காலமாக மலேசிய அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் நிதியமைச்சரும், அம்னோவின் பொருளாளருமான துன் டாயிம் சைனுடின் 14-வது பொதுத் தேர்தல் காலகட்டத்தில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார்.

முதல் கட்டமாக, கிழக்குக் கரை இரயில் இணைப்புத் திட்டத்தை (East Coast Rail Link – ECRL) 55 பில்லியன் ரிங்கிட் செலவில் மேற்கொள்ளும் சீன நாட்டின் சைனா கொம்யுனிகேஷன்ஸ் கொண்ஸ்ட்ரக்‌ஷன் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கும் அரசாங்க முடிவை டாயிம் சாடியிருக்கிறார்.

“நானும் ஜிஎஸ்டி வரி கட்டுகிறேன். மக்களும் வரி கட்டுகிறார்கள். ஆனால் இது பற்றி அரசாங்கத்திற்கு கவலையில்லை. ஒரு வணிக நிறுவனம், அதுவும் சீனாவின் நிறுவனம், ஜிஎஸ்டி வரி கட்டுவதிலிருந்து அரசாங்கம் விலக்கு அளிக்கிறது. எப்படியிருந்தாலும் அவர்கள் இலாபம் சம்பாதிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு ஏன் வரிச் சலுகை அளிக்க வேண்டும்?” என டாயிம் கேள்வி எழுப்பினார்

#TamilSchoolmychoice

லங்காவியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது டாயிம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

“மகாதீர் ஆட்சிக்குப் பின்னர் லங்காவி” என்ற தலைப்பில் லங்காவியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் முன்னாள் பத்திரிக்கையாளரும், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம் குழுமத்தின் முன்னாள் தலைமை ஆசிரியருமான ஏ.காடிர் ஜாசினுடன் டாயிம் சைனுடினும் கலந்து கொண்டார்.

இசிஆர்எல் – கிளந்தானின் தும்பாட் தொடங்கி போர்ட் கிளாங் வரையிலான இரயில் பாதை

இதுகுறித்து, சுங்கத் துறை இயக்குநர் சுப்ரோமணியம் துளசி கருத்து தெரிவிக்கையில், இத்தகைய வரிவிலக்கு ஒன்றும் புதிதல்ல என்றும் ஏற்கனவே, மகாதீர் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற வரிவிலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்றும் தற்காத்துப் பேசியிருந்தார். மேலும் இந்த வரிவிலக்கின் மூலம் மக்கள்தான் பயனடைகிறார்களே தவிர சீனாவின் நிறுவனம் அல்ல என்றும், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் நடைமுறைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நிதியமைச்சின் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் “இசிஆர்எல் திட்டத்தின் செலவைக் குறைக்கும் விதமாகவே அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது” என்று கூறியிருந்தார்.

இதுபோன்ற அரசாங்கத்தின் தற்காப்பு வாதங்களுக்கு பதிலளித்த டாயிம், “இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களுக்கும்தான் ஜிஎஸ்டி வரியால் செலவுகள் அதிகரிக்கின்றன. நாங்களும்தான் கஷ்டப்படுகிறோம். ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மக்களுக்குப் பயன் என்று கூறி 55 பில்லியன் திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது” என்று கூறினார்.

“மேலும் இசிஆர்எல் திட்டத்தின் செலவைக் குறைக்கிறோம் எனக் கூறுவதன் மூலம் அந்தத் திட்டத்திற்கான செலவு அறிவிக்கப்பட்டதைவிட அதிகம் என்பதை அரசாங்கம் மறைமுகமாத் தெரிவிக்கிறது. அப்படியென்றால் ஜிஎஸ்டியை சேர்த்தால் திட்டத்தின் செலவு மேலும் கூடுதலாகுமா?” என்றும் டாயிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

துன் மகாதீர் ஆட்சிக் காலத்தில் நீண்ட காலமாக டாயிம் நிதியமைச்சராக இருந்தவராவார்.