கோலாலம்பூர் – பெண்கள் மட்டும் தான் அழகைப் பராமரிப்பார்களா? இன்றைய காலத்தில் மேலை நாடுகளில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அழகைப் பராமரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
நீண்ட சடை முடியாக இருந்தாலும், முகத்தை மறைக்கும் தாடியாக இருந்தாலும் இன்றைய ஆண்கள் அதனை மிகவும் திருத்தமாகப் பராமரித்து வருகின்றார்கள். அதற்கெனப் பிரத்தியேக கிரீம்களும், எண்ணெய்களையும் பயன்படுத்துகிறார்கள்.
மேலும், முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்வதிலும் ஆண்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.
அதற்குக் காரணம், ஆண்களுக்கென்று பிரத்தியேகமாக அழகு நிலையங்கள் வரத் தொடங்கியிருப்பது தான்.
அந்த வகையில், ‘டிடி மேன்ஸ் பியூட்டி கேர்’ என்ற புதிய அழகு நிலையம், மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகனால் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பரத நாட்டியம், ஒடிசி நடனக் கலைஞர் பத்மஸ்ரீ ரம்லி இப்ராகிம், அனைத்துலக ஒடிசி நடனக் கலைஞர் சந்தியா மனோஜ், மலேசிய மிஸ்டர் சுற்றுலாப் போட்டியில் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றவரும், ‘டிடி மேன்ஸ் பியூட்டி கேர்’ தூதருமான ஜோசுவா பெனடிக் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, ‘டிடி மேன்ஸ் பியூட்டி கேர்’ அழகு நிலையத்தைத் திறந்து வைத்த டத்தோ டி.மோகன், இது போன்ற துறைகளில் இந்திய இளைஞர்கள் இன்னும் அதிகமாகக் கால்பதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
‘டிடி மேன்ஸ் பியூட்டி கேர்’ நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் கணேசன் கூறுகையில், “இன்றைய காலத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் தங்களது அழகைப் பராமரிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனை உணர்ந்து ‘டிடி மேன்ஸ் பியூட்டி கேர்’ என்ற அழகு நிலையத்தை ஆண்களுக்கென பிரத்தியேகமாகத் தொடங்கியிருக்கிறேன். இதனைத் தொடங்குவதற்கு முன்பாக ஆண்கள் அழகு பராமரிப்பு தொடர்பான பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
‘டிடி மேன்ஸ் பியூட்டி கேர்’ குறித்த மேல் விவரங்களையும், அதன் சேவைகள் பற்றியும் அறிய 0183559353 என்ற எண்ணில் சரவணன் கணேசனைத் தொடர்பு கொள்ளலாம்.