Home நாடு கோத்தா ராஜாவில் மஇகா வேட்பாளரை எதிர்க்கப் போவது முகமட் சாபு!

கோத்தா ராஜாவில் மஇகா வேட்பாளரை எதிர்க்கப் போவது முகமட் சாபு!

1403
0
SHARE
Ad
முகமட் சாபு – அமான கட்சியின் தேசியத் தலைவர்

ஷா ஆலாம் – தேசிய முன்னணி சார்பில் மஇகா போட்டியிடப் போகும் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபு பக்காத்தான் ராயாட் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மஇகா வேட்பாளர்களின் பட்டியல்படி கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் சிப்பாங் மஇகா தொகுதியின் தலைவர் வி.குணாளன் போட்டியிடுவார்.

நேற்று ஷா ஆலாமில் அமானா கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல்படி சிலாங்கூர் மாநிலத்தில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் அமானா போட்டியிடுகிறது.

#TamilSchoolmychoice

அதில் கோத்தா ராஜா நாடாளுமன்றமும் ஒன்று.

கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 2013 பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற சித்தி மரியா மாஹ்முட் இந்த முறை ஸ்ரீ செர்டாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா தொகுதியில் 29,395 வாக்குகள் பெரும்பான்மையில் பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சித்தி மரியா வெற்றி பெற்றார்.

இங்கு பாஸ் மீண்டும் போட்டியிடும் என்பதால் தேசிய முன்னணி, அமனா, பாஸ் என மும்முனைப் போட்டி கோத்தா ராஜாவில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமனா போட்டியிடும் மற்ற நாடாளுமன்றத் தொகுதிகள்

கோத்தா ராஜா தவிர்த்து, கோலசிலாங்கூர், ஷா ஆலாம், சிப்பாங், உலு லங்காட் ஆகிய தொகுதிகளிலும் அமானா போட்டியில் குதிக்கிறது.

மொத்தம் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் அமானா போட்டியிடுகிறது.

கோலசிலாங்கூரில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கிப்ளி அகமட் மீண்டும் போட்டியிடுகிறார். ஷா ஆலாம் தொகுதியில் காலிட் சமாட் மீண்டும் போட்டியிடுகிறார்.

சிப்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் நடப்பு உறுப்பினர் ஹனிபா மைடின் மீண்டும் நிறுத்தப்படுகிறார். உலு லங்காட்டில் ஹசானுடின் யூனுஸ் அமனா கட்சியின் சார்பில் நிறுத்தப்படுகிறார்.

இவை தவிர 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமனா சிலாங்கூரில் போட்டியிடுகிறது.