Home தேர்தல்-14 பாரிசானை மூழ்கடிக்கும் அளவிற்கு ‘மலாய் சுனாமி’ வலுவாக இல்லை – ஆய்வு தகவல்!

பாரிசானை மூழ்கடிக்கும் அளவிற்கு ‘மலாய் சுனாமி’ வலுவாக இல்லை – ஆய்வு தகவல்!

816
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் சில மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இருந்தாலும் கூட, எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியில் அமரும் அளவுக்கு அந்த ஆதரவு வலுவாக இல்லையென மெர்டேக்கா மையத்தின் ஆய்வறிக்கை கூறுகின்றது.

இது குறித்து அதன் திட்ட இயக்குநர் இப்ராகிம் சஃபியான் கூறுகையில், ஜோகூர் மாநிலத்தை ஓர் உதாரணமாக எடுத்துக் கொண்டால், அங்கு மலாய் வாக்காளர்கள் பக்காத்தானுக்கு சாதகமாக இருந்தாலும் கூட, அம்மாநிலத்தைக் கைப்பற்றும் அளவிற்கு வலுவாக இல்லை.

அதேபோல் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் சொந்த மாநிலமான கெடாவில், இதற்கு முன்பு பாஸ் கட்சிக்கு ஆதரவளித்தவர்கள் மூலம் மட்டுமே அவருக்கு ஆதரவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

#TamilSchoolmychoice

“2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில், எதிர்க்கட்சிகளுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு அதிகரித்திருப்பதைக் காண முடிகின்றது. ஆனால், பாரிசானில் இருந்து பிரியும் அந்த ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு சில வழிகளில் தான் கிடைக்கின்றது.

“சிலாங்கூரில் மட்டும், எதிர்க்கட்சிகளால் போதுமான ஆதரவைப் பெற்று மீண்டும் மாநில அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியும். குறிப்பாக மலாய் வாக்காளர்களின் மூலம் இது சாத்தியம்.

“மற்ற மாநிலங்களைப் போல் ஜோகூரிலும், மாற்றம் இருக்கிறது. ஆனால் கெடாவைப் போல் இப்போதைக்கு அதுவும் வலுவாக இல்லை (அரசாங்கம் அமைக்கும் அளவிற்கு).

“ஆனால், சில மாநிலங்களில் இன்னும் அந்த ஆதரவு பாரிசானுக்கு தான் இருக்கிறது. உதாரணமாக திரங்கானு மற்றும் கிளந்தானைச் சொல்லலாம்” என இப்ராகிம் சஃபியான் நேற்று இரவு கோலாலம்பூர் நோட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘மலேசியா 14-வது பொதுத்தேர்தல் பார்வை: கண்ணோட்டம் மற்றும் முடிவுகள்’ என்ற கருத்தரங்கிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

14-வது பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சிகள் பினாங்கையும், சிலாங்கூரையும் இயல்பாகத் தற்காத்துக்கொள்ள முடியும் என்றும், மற்ற மாநிலங்களில் அது சாத்தியமில்லை என்றும் இப்ராகிம் ஆரூடம் கூறினார்.

மேலும், ஹராப்பான், பாரிசானை மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு கலைக்க சாத்தியமான ஒரே மாநிலம் சபா தான், அங்கு ஹராப்பான் மற்றும் பார்ட்டி வாரிசான் சபா சில வழிகளை ஏற்படுத்தலாம். ஆனால், அரசாங்கத்தை அமைக்க அது போதுமானதாக இருக்குமென நாங்கள் கருதவில்லை” என்றும் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

கடந்த வாரம் மெர்டேக்கா மையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.