கோலாலம்பூர் – (காலை 10.15 மணி நிலவரம்) துன் மகாதீர் தலைமையேற்ற பக்காத்தான் கூட்டணி மத்திய அரசாங்கத்தை அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியதன் விளைவாக, அவர் அறிவித்தபடி இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் (மே 10 & 11) அரசாங்கப் பொதுவிடுமுறைகளாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா அறிவித்துள்ளார்.
இன்று அதிகாலையில் அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் “நான் இன்னும் பிரதமராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால், அரசாங்கத் தலைமைச் செயலாளர்தான் அந்த 2 நாட்கள் விடுமுறையை அறிவிக்க வேண்டும்” என்று மகாதீர் கூறியிருந்தார்.
“அனைவரும் விடுமுறையில் இருப்பர். ஆனால் இந்தத் தேர்தலில் வென்றவர்களுக்கு மட்டும் விடுமுறை இல்லை” என்றும் மகாதீர் கிண்டலாகக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் மகாதீர் பிரதமராகப் பதவியேற்பார் என அறிவிப்புகள் வெளியாகி இருந்தாலும், இதுவரையில் (காலை 10.15) மணி வரை மகாதீர் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரண்மனையை வந்தடையவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.