Home தேர்தல்-14 செல்லியல் பார்வை: இந்தியர் கட்சி கிடையாது! ஆனால் நாடாளுமன்றத்தில் 16 இந்தியர்கள்

செல்லியல் பார்வை: இந்தியர் கட்சி கிடையாது! ஆனால் நாடாளுமன்றத்தில் 16 இந்தியர்கள்

1944
0
SHARE
Ad
பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பின் பக்காத்தான் தலைவர்கள்…

(அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆளும் அரசாங்கத்தில் 60 ஆண்டுகளில் முதன் முறையாக இந்தியர்களுக்கென அரசியல் பிரதிநிதித்துவ கட்சி இல்லை. ஆனால் நாடாளுமன்றத்திலோ 15 இந்தியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதுகுறித்து விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

கடந்த 60 ஆண்டுகளாக இன ரீதியான தேசிய முன்னணி அரசாங்கத்தில் இந்தியர்களின் அரசியல் பிரதிநிதியாக வீற்றிருந்த கட்சி மஇகா. ஆனால், துன் மகாதீர் தலைமையில் அமையும் புதிய அரசாங்கத்தில் இந்தியர்களுக்கென எந்த அரசியல் கட்சி பிரதிநிதித்துவமும் இல்லை.

ஆனால், நாடாளுமன்றத்திலோ 16 இந்தியர்கள் இடம் பெறப் போகிறார்கள்!

#TamilSchoolmychoice

இதுதான் மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொள்ளப் போகும் புதிய அரசியல் பயணமாகும்.

முதலில் 14-வது நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் எனப் பார்ப்போம்:-

பிகேஆர்

  1. கேசவன் – சுங்கை சிப்புட்
  2. சிவராசா – சுங்கை பூலோ
  3. சேவியர் ஜெயகுமார் – கோல லங்காட்
  4. டேனியல் பாலகோபால் – போர்ட்டிக்சன்
  5. சந்தார குமார் – சிகாமாட்
  6. கருப்பையா – பாடாங் செராய்

ஜசெக

  1. கஸ்தூரி ராணி பட்டு
  2. ராயர் – ஜெலுத்தோங்
  3. ராம் கர்ப்பால் – புக்கிட் குளுகோர்
  4. குலசேகரன் – ஈப்போ பாராட்
  5. சிவகுமார் – பத்து காஜா
  6. கோபிந்த் சிங் – பூச்சோங்
  7. சார்ல்ஸ் சந்தியாகோ – கிள்ளான்

மஇகா-தேசிய முன்னணி

  1. எம்.சரவணன் – தாப்பா
  2. சிவராஜ் சந்திரன் – கேமரன் மலை

சுயேச்சை (பிகேஆர் ஆதரவு)

  1. பிரபாகரன் – பத்து

பல அரசியல் விவாதங்களில் முன்வைக்கப்படும் வாதம் இந்தியர்களுக்கென ஓர் அரசியல் கட்சி மத்திய, மாநில அரசாங்கத்தில் தேவைதானா என்பதுதான்!

ஆனால், தற்போது அமைந்திருக்கும் அரசாங்கத்தில் அத்தகைய சூழல் – இந்தியர்களுக்கென பிரத்தியேகக் கட்சி இருக்கின்ற சூழல் – இல்லை.

இருப்பினும், 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து இந்திய அமைச்சர்களும் துணையமைச்சர்களும் மத்திய அரசாங்கத்தில் நியமிக்கப்படுவார்கள்.

நியமிக்கப்படவிருக்கும் புதிய செனட்டர்களிலும் இந்தியர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

மாநில அளவில் இந்திய சட்டமன்ற உறுப்பினர்களும் வென்றிருப்பதால், மாநில அரசாங்க ஆட்சிக் குழுக்களிலும் இந்தியப் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பார்கள்.

பிகேஆர், ஜசெக போன்ற பலஇனக் கட்சிகளில் இருந்து இனி இந்தியர்கள் அனைத்து அரசாங்கப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த சூழல் வெற்றியடைந்தால், இனி இந்தியர்களுக்கென கட்சிகள் தேவை என்ற நிலைமையே நாளடைவில் காணாமல் போகும்.

மஇகா என்னவாகும்?

எதிர்க்கட்சி உறுப்பினர்களாகச் செயல்படப் போகும் மஇகாவின் டத்தோ எம்.சரவணன், டத்தோ சிவராஜ் இருவருமே துடிப்புடன் செயல்படக்கூடியவர்கள். மலாய் மொழியில் நாடாளுமன்ற விவாதங்களில் சரளமாக, ஆணித்தரமாக விவாதிக்கக் கூடியவர்கள் என்பதால், இந்தியர் சமுதாயத்திற்கென ஒலிக்கப் போகும் அவர்களின் குரலும், அவர்களின் நடவடிக்கைகளும் கூட இந்திய சமுதாயத்தால் பார்க்கப்படும்.

எனவே, இந்தப் புதிய அரசியல் கட்டமைப்பில் அவர்களின் இடத்தையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

மாறியிருக்கும் புதிய அரசியல் சூழலில், தனக்கும் ஓர் இடம் உண்டு என்பதை நிர்ணயித்துக் கொள்ள – தனது பங்களிப்பு என்ன என்பதை உறுதி செய்து கொள்ள – தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள, புனரமைத்துக் கொள்ள – மஇகா பாடுபட வேண்டும்.

மஇகா தனது ஆணிவேரைத் தேடி கீழ்நோக்கிச் செல்ல வேண்டிய காலகட்டம் இது. இந்தியர்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், கலாச்சாரப் பண்பாடுகளைத் தற்காப்பதற்காகவும் அரசியல் ரீதியாக போராடுவதற்காகவும், உருவாக்கப்பட்ட மஇகா, மீண்டும் தனது போராட்டக் களத்திற்கு திரும்ப வேண்டும்.

இல்லையேல், அடுத்த பொதுத் தேர்தல் வரும்போது மஇகாவின் தேவையே இல்லாமல் போகும்.

இந்தியர்களுக்கென அரசியல் கட்சி இல்லாத சூழலில் மலேசிய இந்தியர்களுக்கான உரிமைகள், சலுகைகள் நிலைநிறுத்தப்படுகிறதா – அதிகரிக்கப்படுகிறதா – என்பதையும் புதிய அரசியல் கட்டமைப்பு எடுத்துக் காட்டும்.

இந்தக் கட்டமைப்பில் இந்தியர் கட்சிகளாக தங்களை இணைத்துக் கொள்ள ஹிண்ட்ராப் போன்ற அமைப்புகள் முன்வரும். அவை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும், மக்களின் ஆதரவைப் பெறும் என்பதும், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் ஹிண்ட்ராப்புக்கு ஆதரவுக் கரம் நீட்டுமா என்பதும் போகப் போகத்தான் தெரியும்.

இந்தப் புதிய அரசியல் பயணத்தில் இணைந்து பயணம் செய்ய நாமும் தயாராவோம்!

-இரா.முத்தரசன்