புத்ரா ஜெயா – மலேசியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் கோபால் ஸ்ரீராம். சிறந்த வழக்கறிஞராகப் பரிணமித்த அவரை 1994-ஆம் ஆண்டில் நேரடியாக கோர்ட் ஆப் அப்பீல் எனப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக அரசாங்கம் நியமித்தது.
தனியார் வழக்கறிஞர் ஒருவர் மரபுகளை மீறி நேரடியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டது மலேசிய அரசியல் துறை வரலாற்றில் அதுவே முதன் முறை.
பொதுவாக மலேசியாவில் அரசாங்க சேவையிலும், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) அலுவலகத்திலும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில் நேரடியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம் பெற்றவர் ஸ்ரீராம். அப்போது பிரதமராக இருந்தவர் மகாதீர்.
அதற்கு முன்பாக, 1988-ஆம் ஆண்டில் அம்னோ சட்டப்படி செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில் அம்னோவின் சார்பில் – அப்போதைய அம்னோ தலைவர் மகாதீரின் சார்பில் வழக்காடியவரும் இதே ஸ்ரீராம்தான்.
பின்னார் 2009-இல் கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், பணி ஓய்வுக்குப் பின்னரும் மீண்டும் வழக்கறிஞராகச் செயல்பட்டார்.
வயதானாலும், ஓய்வு எடுப்பதை விரும்பாதவர் – அதைவிட முக்கியமாக தனது சட்டத் தொழில் மீது தீராத காதல் கொண்டவர் – என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
முன்னாள் நீதிபதியாக இருந்தாலும், அன்வார் இப்ராகிம் தொடர்பான பல வழக்குகளில் அவரைப் பிரதிநிதித்தார் ஸ்ரீராம்.
மகாதீர் 14-வது பொதுத் தேர்தலில் வென்ற பின்னர், பெட்டாலிங் ஜெயா ஷெராட்டன் தங்கும் விடுதியில் மாமன்னர் அழைப்புக்காக காத்திருந்த தருணங்களில் ஸ்ரீராம் அவரோடு காணப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
மாமன்னர் மகாதீரைப் பதவியேற்க அழைக்க வேண்டும் – சட்ட ரீதியாக அவருக்கு வேறு வழியில்லை என்றும் பகிரங்கமாக அறிக்கை விட்டார் ஸ்ரீராம்.
அதற்குப் பின்னரும், 1எம்டிபி முதற்கொண்டு, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி விவகாரம் வரை – ஸ்ரீராம்தான் மகாதீருக்கு சட்ட நுணுக்கங்களை வழங்கி வருகிறார் எனப் பலரும் கருதுகின்றனர்.
அதற்கேற்ப, இன்று புதன்கிழமை (மே 15) சில முக்கிய நபர்கள் மகாதீரைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
பிரதமரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் இன்னும் மகாதீர் நுழையவில்லை என்றாலும், அவர் தலைமையில் இயங்கும் பெர்டானா லீடர்ஷிப் பவுண்டேஷன் (Perdana Leadership Foundation) அலுவலகம்தான் தற்போது பிரதமர் துறை அலுவலகம் போல் செயல்பட்டு வருகின்றது.
முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் கனி பட்டேல், நடப்பு தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் ஷாரிப் ஆகியோர் மகாதீரை இன்று பிற்பகலில் வந்து சந்தித்த வேளையில், அந்தத் தருணங்களில் மகாதீரின் அலுவலகத்தில் ஸ்ரீராமும் காணப்பட்டார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமான பல சட்டரீதியாக முடிவுகளை எடுக்கும் அரசாங்கத்திற்கும், மகாதீருக்கும் பின்னணியில் சட்ட மூளையாக ஸ்ரீராம்தான் செயல்படுகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஸ்ரீராம் குறித்த இன்னொரு சுவாரசியத் தகவல்:
நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவரும், பெர்சே அமைப்பின் முன்னாள் தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசனின் தந்தையார் டாக்டர் சீனிவாசனின் உடன் பிறந்த இளைய சகோதரர்தான் ஸ்ரீராம்!