
கோலாலம்பூர் – இன்று பிற்பகலில் தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது விடுதலைக்கு அனைத்து வகைகளிலும் துணை நின்ற பிரதமர் துன் மகாதீருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் உடனடியாக அமைச்சரவையில் இடம் பெறத் தான் அவசரப்படவில்லை என்றும் துன் மகாதீர் – வான் அசிசா தலைமையிலான அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து தன்னுடைய முழு ஆதரவை வழங்கப் போவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்து விடுதலையான பின்னர் அங்கிருந்து உடனடியாக மாமன்னரின் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்ற அன்வாரை அங்கு மாமன்னர் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து அளவளாவினார்.
பின்னர் தனது வீட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அன்வார் இப்ராகிம், உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு அரசாங்கங்கள், பல்கலைக் கழகங்கள் உரையாற்றும்படி தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், முதலில் அந்த அழைப்புகளுக்கு மதிப்பு கொடுத்து அந்த நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.