கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நண்பகலில் தனது ஆதரவாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் மஇகா தலைமையகத்தில் சந்தித்த மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், விரைவில் நடைபெறவிருக்கும் மஇகா தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்த ஆண்டு நடைபெறும் கட்சித் தேர்தலில் எந்தப் பதவிக்கு போட்டியிடுவது என்பது குறித்து தான் ஆலோசித்து வந்த வேளையில், 14-வது பொதுத் தேர்தலில் மஇகா மோசமான தோல்வியைச் சந்தித்ததோடு, தேசிய முன்னணி அரசாங்கமே ஆட்சியை இழக்கும் அதிர்ச்சிகரமான நிலைமை ஏற்பட்டது என்று தனது உரையில் விக்னேஸ்வரன் கூறினார்.
அதைத் தொடர்ந்து நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கும் காரணத்தால், கட்சியை மறு சீரமைக்கும் நோக்கில் தானே தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்ததாக விக்னேஸ்வரன் கூறினார்.
முடிவு செய்து விட்ட காரணத்தால், கிளைத் தலைவர்களுக்கு உடனடியாக தனது முடிவைத் தெரிவிக்கும் நோக்கில் பகிரங்கமாக இந்த அறிவிப்பைச் செய்வதாக விக்னேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டார்.