கோலாலம்பூர் – தனது அமைச்சரவையில் கல்வி அமைச்சராகத் தானே பொறுப்பேற்கப் போவதாகவும், கல்வித் துறையில் நிறைய மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாகவும் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து, மலேசியர்களிடையே பெரும் வரவேற்பும், ஆர்வமும் எழுந்தது.
ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே பிரதமர் கூடுதல் அமைச்சுப் பொறுப்பை வகிக்கக் கூடாது என்பது பக்காத்தான் கூட்டணி வழங்கிய தேர்தல் வாக்குறுதி என பலரும் மகாதீருக்கு நினைவுபடுத்த உடனடியாக தனது அறிவிப்பிலிருந்து பின்வாங்கினார் மகாதீர்.
தான் கல்வி அமைச்சராகப் போவதில்லை என அறிவித்தார். எனினும் மக்கள் விரும்பினால் தான் தனது முடிவை மறுபரிசீலனை செய்யக் கூடும் என்றும் மகாதீர் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மகாதீரை மீண்டும் கல்வி அமைச்சராக்குவோம் என்ற இணையம் வழியான மனுவைச் சமர்ப்பித்த ரவீன் டேவ் என்ற மலேசிய இந்தியர் அதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மலேசியர்களைக் கேட்டுக் கொள்ள தற்போது அந்த மனுவுக்கு ஆதரவாக இதுவரை 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மகாதீர் தனது முடிவை மாற்றிக் கொள்வாரா என்பது திங்கட்கிழமை தெரியவரும் – காரணம் அன்றுதான் அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.