Home தேர்தல்-14 “அமைச்சரவையில் 3 இந்தியர்கள்” – அரசு சாரா இயக்கங்கள் வேண்டுகோள்

“அமைச்சரவையில் 3 இந்தியர்கள்” – அரசு சாரா இயக்கங்கள் வேண்டுகோள்

1181
0
SHARE
Ad

முக்கிய அமைச்சர்கள் அடங்கிய இந்திய சமூகத்திற்கான சிறப்புப் பணிக்குழு – நாட்டின் முதன்மை அரசு சாரா அமைப்புகள் வரவேற்பு

கோலாலம்பூர் — 14-வது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பக்கபலமாக நின்ற இந்திய சமூகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அச்சமூகத்தைப் பீடித்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சிறப்புப் பணிக்குழுவுக்குப் பிரதமர் துன் மகாதீர் அவர்களே தலைமையேற்பார் என்ற செய்தியை நாட்டின் முக்கிய இந்திய சமூக அமைப்புகள் வரவேற்றுள்ளன.

அந்த இந்திய சமூக அமைப்புகள் கூட்டாக மே 18-ஆம் தேதி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்திய சமூகத்தைச் சமூகப் பொருளியல் ரீதியில் இதர சமூகங்களுக்கு இணையாக உயர்த்துவது தன் முக்கிய இலக்குகளில் ஒன்றென நம்பிக்கைக் கூட்டணி தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இவ்விலக்கை அடைவதற்கு 25 திட்டங்களடங்கிய சிறப்பு வாக்குறுதி ஒன்றையும் கூட்டணி தன் அறிக்கையில் கொடுத்திருந்தது.

“தேர்தல் வாக்குறுதிகள் என்றாலே அவை முறையாக நிறைவேற்றப்படுமா என்ற அவநம்பிக்கை மக்களிடமுள்ளது; ஆதலால், அவற்றை நிறைவேற்றுவதற்கான பணிக்குழுவில், பிரதமருக்கு நல்ல கருத்தாலோசன சொல்வதற்காக நம் வலிகளையும் எதிர்பார்ப்புகளையும் பார்த்த, உணர்ந்த ஒரு இந்திய முழு அமைச்சரேனும் இடம்பெறுதல் அவசியமாகும்,” என்று இந்திய சமூக அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் க. குணசேகரன் கூறினார்.

“இந்தப் பரிந்துரையை நாங்கள் பிரதமருக்கும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைமைகளிடமும் கடிதம்வழித் தெரிவித்து விட்டோம்,” என்ற குணசேகரன், அமைக்கப்பட்டு வரும் புதிய அமைச்சரவையில் மூன்று அல்லது நான்கு பேராவது இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது சிறப்பு என்றார்.

நம்பிக்கைக் கூட்டணியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இன்று இந்தியர் என்றாலே அவர் கீழானவர், இரண்டாம் குடி என்ற ஒரு தவறான பார்வை மலேசியர்களிடையே நிலவுகிறது. இதனை மாற்ற வேண்டும். அடுத்து, கூட்டணியின் 25 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு அறிவும் ஆற்றலுமுடைய ஒரு பணிப்படையும், அமைச்சரவையில் ஒரு வலுவான குரலும் தேவைப்படுகிறது. அதோடு, இதுகாறும் தாங்கள் நம்பியிருந்த இந்தியர்களுக்கான அரசியல் கட்சியையும், அவர்கள் வகுத்த மலேசிய இந்தியர்களின் பெருந்திட்டத்தையும் வாக்களித்த பத்து பேரில் ஒன்பது பேர் ஒதுக்கி வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சாவண்ணம் கூட்டணி பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்காகவேனும், அமைச்சரவையில் மூன்று அல்லது நான்கு பேராவது இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவசியமாகிறது.

இந்திய சமூகத்தின் சமூக-பொருளிய மேம்பாட்டுக்காகப் பல்லாண்டுகளாகப் பணியாற்றிய அனுபவமும் அறிவும் மலேசிய இந்தியச் சமூகங்களின் பேரவையில் இடம்பெற்றுள்ள அமைப்புகளுக்கு உள்ளது. அந்த அடிப்படையில், புதிய அரசாங்கத்தோடு இணைந்து இந்திய சமூகத்தின் சிக்கல்களைத் தீர்ப்பதில் முனைப்புடன் செயல்படத் தாங்கள் தயாராக உள்ளதாக அப்பேரவை தெரிவித்தது. புதிய அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களும் திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் அமலாக்கம் காண பேரவை துரிதமாகக் கடமையாற்றும்.

தோற்றுவிக்கப்பட்டுள்ள மலேசிய இந்தியச் சமூக அமைப்புகளின் பேரவையில் தற்போது 14 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அமைப்பும் நெடுங்காலமாக மலேசிய இந்தியச் சமூக நலனுக்காகவும் வளப்பத்துக்காகவும் பாடுபட்டு வரும் அமைப்பாகும்.

(குறிப்பு: துன் மகாதீர் அறிவித்துள்ள அமைச்சரவையில், குலசேகரன், கோபிந்த் சிங் டியோ என இரண்டு இந்திய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.)