அங்கு அவருக்கு கண்ணீருடன் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர் என ஊடகங்கள் தெரிவித்தன.
பெக்கான் நஜிப்பின் தனிப்பட்ட வாழ்க்கையோடும், அரசியல் பயணத்தோடும் இரண்டறக் கலந்துவிட்ட நாடாளுமன்றத் தொகுதியாகும். 1976-ஆம் ஆண்டில் நஜிப்பின் தந்தையார் துன் அப்து ரசாக் அகால மரணமடைய தனது 22-வது வயதில், இலண்டனில் கல்வி கற்று வந்த நஜிப் பெக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
இத்தனை ஆண்டுகளாக மிக இளவயதில் – 22 வயது 7 மாதமே ஆகியிருந்த நிலையில் – மலேசிய நாடாளுமன்றத்தில் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினராக சாதனையைக் கைவசம் வைத்திருந்தவர் நஜிப். இந்த ஆண்டில்தான் அவரது சாதனை முறியடிக்கப்பட்டது. முறியடித்தவர் 22 வயது 3 மாதமே ஆகிய நிலையில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் வென்ற பிரபாகரன்.
தற்போது முதன் முறையாக தனது வாழ்நாளில் தேசிய முன்னணி ஆட்சியை இழந்து நிற்கும் நிலையில் – அதற்கு அவரே முக்கியக் காரணமாகிவிட்ட சூழ்நிலையில் – இன்று பெக்கான் திரும்பியிருக்கிறார் நஜிப்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22 மே) ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்து 1எம்டிபி விவகாரம் குறித்த தனது வாக்கு மூலத்தை அவர் வழங்குவார்.