Home தேர்தல்-14 இராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி

இராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி

3201
0
SHARE
Ad
மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகப் பதவியேற்கும் இராமகிருஷ்ணன் (படம்: நன்றி – ஜோகூர் அரச ஊடகம்)

ஜோகூர் பாரு – கடந்த புதன்கிழமை மே 16-ஆம் தேதி பதவியேற்ற பக்காத்தான் ஹரப்பான் சார்பிலான புதிய ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில், இந்தியர் பிரதிநிதியாகப் பதவியேற்கும் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன், சமூக இயக்கங்களிலும், எதிர்க்கட்சி அரசியலிலும் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வருபவராவார்.

ஜசெக கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்ட இராமகிருஷ்ணன், தொடர்ந்து தனது அரசியல் கருத்துகளை ஊடகங்களில் கட்டுரைகளாகப் பதிவு செய்து வரும் வழக்கத்தைக் கொண்டவர்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்படும் செனட்டராக ஒரு தவணைக்கு பதவி வகித்தவர் இராமகிருஷ்ணன்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநில ஜசெகவில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தவர் ஜோகூர் மாநில அரசியலில் காலடி வைத்ததும், பின்னார் நாடாளுமன்றம், சட்டமன்றம் எனப் போட்டியிட்டு இன்று ஜோகூர் மாநில ஆட்சிக்குழு வரை இடம் பெற்றிருப்பதும், அவரே எதிர்பார்த்திருக்காத இனிய வாழ்க்கைத் திருப்பங்களாகும்.

தெனாங் சட்டமன்ற இடைத் தேர்தல்

பெக்கோக் வேட்பாளர் இராமகிருஷ்ணன்-லாபிஸ் வேட்பாளர் பாங் – ஆயர் ஈத்தாம் வேட்பாளர் லியூ ஆகியோருடன் கிட் சியாங்

ஜோகூர் லாபிஸ் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான தெனாங் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் 2011-இல் நடைபெற்றபோது, அங்கு களப்பணியாற்ற ஜசெக சார்பில் புறப்பட்டுச் சென்றார் இராமகிருஷ்ணன்.

அந்த காலகட்டத்தில் லாபிஸ் வட்டாரத்தில் ஏற்பட்ட அறிமுகம், அந்தத் தொகுதியில் தொடர்ந்து அவரை சேவையில் ஈடுபடச் செய்தது.

கால ஓட்டத்தில் அங்கேயே தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார் இராமகிருஷ்ணன். அதன் மூலம் ஜோகூர் மாநில ஜசெக பொறுப்புகளிலும் நியமிக்கப்பட்டார். தற்போது ஜோகூர் மாநிலத்தின் ஜசெக துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார் இராமகிருஷ்ணன்.

இராமகிருஷ்ணனின் சேவை காரணமாக, 2013 பொதுத் தேர்தலில் லாபிஸ் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் வாய்ப்பை அவருக்கு ஜசெக வழங்கியது. கடுமையான போராட்டத்திற்கிடையில் சுவா தி யோங்கிடம் 353 வாக்குகளில் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தார் இராமகிருஷ்ணன்.

இருப்பினும், தொடர்ந்து லாபிஸ் தொகுதியிலேயே தனது சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வந்தார் அவர்.

2018 பொதுத் தேர்தலில் தனது தேர்தல் வியூகத்தை சற்றே மாற்றியது ஜசெக. 2013-இல் லாபிஸ் நாடாளுமன்றத்திற்கு இந்தியரான இராமகிருஷ்ணனை நிறுத்தி, அந்தத் தொகுதியின் கீழ்வரும் பெக்கோக் சட்டமன்றத்தில் சீன வேட்பாளரை நிறுத்திய ஜசெக இந்த முறை வியூகத்தை மாற்றியது.

லாபிஸ் நாடாளுமன்றத்திற்கு பாங் ஹோக் லியோங் என்பவரை நிறுத்தி பெக்கோக் நாடாளுமன்றத்திற்கு இராமகிருஷ்ணனை நிறுத்தியது ஜசெக.

அந்த வியூகமும் வெற்றி பெற்றது. லாபிஸ் நாடாளுமன்றம், அதன் கீழ் வரும் தெனாங் (பிகேஆர்), பெக்கோக் (ஜசெக) ஆகிய 2 சட்டமன்றங்கள் – என அனைத்தையும் பக்காத்தான் கூட்டணி கைப்பற்றியது.

மே 9 பொதுத் தேர்தலில் பெக்கோக் சட்டமன்றத்தில் 2,457 வாக்குகள் பெரும்பான்மையில் இராமகிருஷ்ணன் வெற்றி வாகை சூடியதைத் தொடர்ந்து மாநில ஆட்சிக் குழுவிலும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே, பல ஆண்டுகளாக எந்த அரசாங்கப் பதவியும் இல்லாமல் ஜோகூர் மாநிலத்தில் சேவையாற்றி வந்திருக்கும் இராமகிருஷ்ணன் இனி, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற சக்தி வாய்ந்த பதவியின் துணையோடு, மேலும் சிறப்பான, விரிவான சேவைகளை ஜோகூர் இந்தியர்களுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்