Home One Line P1 அமைச்சரவை மாற்றம் : 4 இந்திய அமைச்சர்கள் இரண்டாகக் குறைக்கப்படுவார்களா?

அமைச்சரவை மாற்றம் : 4 இந்திய அமைச்சர்கள் இரண்டாகக் குறைக்கப்படுவார்களா?

2371
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பிரதமர் மகாதீரின் அமைச்சரவை மாற்றத்தில் தற்போதிருக்கும் 4 இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தவுடன் அறிவிக்கப்பட்ட அமைச்சரவைப் பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றனர். ஜசெக சார்பில் கோபிந்த் சிங் டியோ, எம்.குலசேகரன், பிகேஆர் கட்சி சார்பில் டாக்டர் சேவியர் ஜெயகுமார் மற்றும் பிரதமர் துறை அமைச்சராக பொன்.வேதமூர்த்தி ஆகியோரே அந்த நால்வராவர்.

நான்கு இந்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவதால், இந்திய சமூகத்தின் பிரச்சனைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பும் இந்தியர்களிடையே பெருமளவில் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால், விளைந்தது ஏமாற்றமே!

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இந்தியர்களின் பிரச்சனைகள் அப்படியே இருக்கின்றன. தேசிய முன்னணி காலத்திலாவது, இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் என்ற பத்தாண்டு கால வரைவுத் திட்டம் இருந்தது. அதன் வழி சில முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால், ஒன்றரை ஆண்டுகளில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இந்தியர்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் முயற்சிகள் எதுவுமே காணப்படவில்லை.

கோபிந்த் சிங், சேவியர், குலசேகரன் ஆகிய மூன்று அமைச்சர்களும், அவர்களின் அமைச்சுப் பணிகள் குறித்துதான் பேசுகிறார்கள், செயல்படுகிறார்களே தவிர, இந்திய சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து அவர்கள் எதையுமே கண்டு கொள்வதில்லை.

பொன்.வேதமூர்த்தியின் அமைச்சுப் பொறுப்பில் ஒற்றுமைத் துறை மற்றும் பூர்வ குடியினர் விவகாரங்களும் வருவதால், அவரது அமைச்சுப் பணிகளில் பாதியை இந்த விவகாரங்களே ஆக்கிரமிக்கின்றன.

மித்ரா மட்டுமே வேதமூர்த்தியின் கண்காணிப்பின் கீழ் செயல்படுகிறது. மித்ரா பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், மில்லியன் கணக்கான ரிங்கிட் சமூக இயக்கங்களின் வழி இந்தியர் நலத் திட்டங்களுக்காக வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அதிருப்திகள் நிலவிக் கொண்டுதான் இருக்கின்றன.

நடந்து முடிந்த தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் நல்ல வேளையாக இந்திய வாக்காளர்கள் அதிகமில்லை. அப்படி இருந்திருந்தால், தேசிய முன்னணிக்கான பெரும்பான்மை மேலும் அதிகரித்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

மேலும் 2018-ஆம் ஆண்டு அமைச்சரவை நியமனங்களின்போதே சில சபா, சரவாக் அமைப்புகளும், சில மலாய் அமைப்புகளும் வெறும் 7 விழுக்காட்டு மக்கள் தொகையைக் கொண்ட இந்தியர்களுக்கு ஏன் 4 அமைச்சர்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தன.

இந்த நிலையில், இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை – இந்திய விவகாரங்களை யார் கையாள்வது – மித்ராவின் நிலை – அதன் செயல்பாடுகள் – என பல அம்சங்களை மகாதீர் தனது அமைச்சரவை மாற்றத்தின்போது கவனத்தில் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக இந்தியர்களுக்கு 2 அமைச்சுப் பதவிகளே ஒதுக்கப்படும் என்ற ஊகமும் வெளியிடப்பட்டு வருகிறது.

அவ்வாறு மகாதீர் முடிவெடுத்தால் தலை உருளப் போகும் இரண்டு இந்திய அமைச்சர்கள் யார்?

-இரா.முத்தரசன்