ஷா ஆலாம் – பிரதமர் மகாதீர் விரைவில் அறிவிக்கப் போகும் புதிய அமைச்சரவை மாற்றத்தில் இடம் பெறப் போகிறவர்கள் யார் – அமைச்சர் பதவிகளை இழக்கப் போகிறவர்கள் யார் – என்ற ஆரூடங்கள் கிளம்பத் தொடங்கி விட்டன.
மகாதீரின் புதிய அமைச்சரவையில் அன்வார் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும், அதன் மூலம் பிரதமர் பதவிக்கான அதிகார மாற்றம் எளிதாக நிறைவேற்றப்படும் என சில அரசியல் தரப்புகள் எதிர்பார்க்கும் வேளையில், எனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என அன்வார் இப்ராகிம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எட்டாவது பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்னர் அமைச்சரவையில் இடம் பெறுவதற்குத் தான் ஆர்வம் காட்டவில்லை என்றும் அன்வார் கூறினார்.
இன்று ஷா ஆலாமில் சீர்திருத்தங்கள் (ரிபோர்மாசி) 2019 கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது அன்வார் இவ்வாறு கூறினார். அப்போது துணைப் பிரதமர் வான் அசிசாவும் உடனிருந்தார்.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மகாதீர் அன்வார் அமைச்சரவையில் இடம் பெறும் சாத்தியத்தை மறுக்கவில்லை.
எனினும் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அனைத்துத் தரப்பினரும் அமைதியும் பொறுமையும் காக்க வேண்டும் என்றும் தனக்கும் மகாதீருக்கும் இடையிலான பதவி மாற்றத்திற்காக யாருக்கும் நெருக்குதல் தர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
சுமுகமான முறையில் அதிகார மாற்றம் நடைபெற்றால் மட்டுமே பிரதமரும் சிறந்த முறையில் செயலாற்ற முடியும், தானும் பிரதமர் பதவிக்கு வரும்போது நல்ல முறையில் பணியாற்ற முடியும் என அன்வார் தெரிவித்தார்.