கோலாலம்பூர் – தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மிக விரைவில் அமைச்சரவை மாற்றம் கொண்டு வரப் போவதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் அதற்கான இணக்கம் காணப்பட்டது.
புதிய அமைச்சரவையில் அன்வார் இப்ராகிம் இடம் பெறுவாரா எனப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மகாதீர் அது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறினார்.
அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அன்வார் இப்ராகிம் அப்போது, ‘எந்தப் பதவிக்கும் நான் இன்னும் விண்ணப்பிக்கவில்லை’ என நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
நேற்றைய நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் மன்றத்தின் சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் மகாதீர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
நவம்பர் 22-ஆம் தேதி மாமன்னரைச் சந்தித்தபோது அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவது அவ்வளவு எளிதான நடவடிக்கையல்ல என்றும் ஐந்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் தற்போதைய ஆட்சி நடைபெற்று வருவதால், தன்னால் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாது என்பதையும் தான் விளக்கியதாகவும் மகாதீர் தெரிவித்தார்.
எனினும் மக்களின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்வோம் என உறுதி கூறிய மகாதீர், அமைச்சரவை மாற்றம் என்பது மக்களின் விருப்பமாக இருப்பதால், அதனை நிறைவேற்றுவோம் என்றும் கூறினார்.