Home One Line P1 “பக்காத்தானை ஆதரிக்கவும், புதிய கூட்டணி அமைக்கவும் அம்னோவினர் அஸ்மினைச் சந்தித்தனர்” – மகாதீர் விளக்கத்திற்கு மறுப்பு

“பக்காத்தானை ஆதரிக்கவும், புதிய கூட்டணி அமைக்கவும் அம்னோவினர் அஸ்மினைச் சந்தித்தனர்” – மகாதீர் விளக்கத்திற்கு மறுப்பு

925
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி அம்னோ மற்றும் பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கும் நிலையில் அது குறித்து அஸ்மினைத் தான் கேட்டதாகவும், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்காத்தானுக்கு ஆதரவு தரவும், புதிய கூட்டணி அமைக்கவும் தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக அஸ்மின் தெரிவித்ததாகவும் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் மகாதீர் இவ்வாறு தெரிவித்தார். அம்னோ திசை தெரியாமல் சென்று கொண்டிருப்பதால் இந்த முடிவைத் தாங்கள் எடுத்திருப்பதாகவும் அது குறித்து விவாதிக்கவே அஸ்மினை அந்த 22 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்ததாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.

எனினும் பின்னர் இன்னொரு அறிக்கையில் அம்னோவின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா அஸ்மினுடன் சந்திப்பு நடத்தியவர்கள் 16 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் எனத் தெளிவுபடுத்தினார்.

7 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக மறுப்பு

#TamilSchoolmychoice

மகாதீரின் இந்த தகவலைத் தொடர்ந்து அஸ்மினைச் சந்தித்த 7  அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக கூட்டாக வெளியிட்ட மறுப்பு அறிக்கை ஒன்றில் “அஸ்மினுடனான சந்திப்பின்போது எந்த கட்டத்திலும் மகாதீர் கூறியிருப்பது போன்று தாங்கள் பேசவில்லை” என்று குறிப்பிட்டனர்.

இஸ்மாயில் முகமட் சைட் (கோல குராவ்), சலிம் ஷரிப் (ஜெம்போல்), ஜலாலுடின் அலியாஸ் (ஜெலுபு), ரம்லி முகமட் நோர் (கேமரன் மலை), அசாலினா ஒத்மான் சைட் (பெங்கெராங்), அப்துல் ரஹ்மான் முகமட் (லிப்பிஸ்), மஸ்துரா முகமட் யாசிட் (கோலகங்சார்), ஆகியோரே அந்த 7 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

அஸ்மினுடனான இரவு விருந்தின்போது தங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளில் சிறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அரசாங்க மானியங்கள் குறித்தே தாங்கள் விவாதித்ததாகவும் அவர்கள் மேலும் தங்களின் அறிக்கையில் தெரிவித்தனர்.

மாறாக, தஞ்சோங் பியாய் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அம்னோவில் இணைய அஸ்மினுக்குத் தாங்கள் அழைப்பு விடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் அம்னோவை விட்டு விலகப்போவதும் இல்லை, கட்சி மாறப் போவதுமில்லை என அந்த 7 பேர்களும் உறுதிபடத் தெரிவித்தனர். எனினும், இந்தச் சந்திப்பை முன்னிட்டு ஏற்பாடு செய்த ஹிஷாமுடின் ஹூசேன் ஓனின் தரப்பிலிருந்து இதுவரையில் எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.