கோலாலம்பூர் – தமிழகத்தின் நிதி ஆலோசகரும், பல தமிழ் நாட்டு பத்திரிகைகளில் நிதி நிலவரங்கள் குறித்து கட்டுரைகள் எழுதி வருபவருமான எஸ்.கார்த்திகேயன் எழுதிய ‘பிளாங்க் செக்’ என்ற நூலை கடந்த வியாழக்கிழமை நவம்பர் 21-ஆம் தேதி மஇகா தலைமையகக் கட்டடத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெளியிட்டார்.
இந்த நூல் கடந்த செப்டம்பரில் தமிழ் நாட்டின் சென்னையில் வெளியிடப்பட்டபோது அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும், பயனான இந்த நூலை மலேசிய இந்தியர்களும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை வெளியிட்டு, அனைவருக்கும் இலவசமாகவே வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ததாகவும் சரவணன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
ஒரு நூலை எழுதி வெளியிட ஓர் எழுத்தாளர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதை தான் நன்குணர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட சரவணன், சில சமயங்களில் அத்தகைய நூலுக்கு சம்பந்தமில்லாத ஒருவர் வந்து கலந்து கொண்டு, பணம் தருகிறார் என்ற காரணத்திற்காக அவர் உரையாற்றி செல்லும் நிலைமையக் கண்டு பல முறை தான் வருந்தியிருப்பதாகவும் சரவணன் கூறினார்.
“இந்த நூல் வெளியீட்டு விழா அப்படியில்லை. நிதி ரீதியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கார்த்திகேயன் ஆலோசனை கூறி எழுதியிருக்கும் இந்த நூலின் வெளியீட்டு விழாவில் உரையாற்றவிருக்கும் முனைவர் காதர் இப்ராகிம், இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி என்பதற்கொப்ப நாடெங்கிலும் எழுச்சியுரைகளும், தன்முனைப்பு உரைகளும் நிகழ்த்தி வருபவராவார். அதே போல, மற்றொரு உரையாளரான முன்னாள் காவல் துறை ஆணையாளர் டத்தோஸ்ரீ தெய்வீகனும் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் காவல் துறையில் ஓய்வு பெற்றவராவார். அவரே நூல்கள் எழுதி இந்திய சமுதாயத்தினரைத் திருத்தப் பாடுபட்டு வருகிறார். இத்தகையோரின் உரைகளோடு இந்த நூல் வெளியீடு நிகழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்றும் சரவணன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும் உரையாற்றினார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர் விஜயராணி செல்லப்பா வரவேற்புரையாற்றினார்.