சென்னை – இயக்குநர் ஏ.எல்.விஜய் கைவண்ணத்தில் உருவாகி வரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’. இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவுட் நடித்து வருகிறார்.
தலைவி படத்தின் குறு முன்னோட்டம் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், ஒரே நாளில் ஆர்வத்துடன் இதுவரையில் 1.1 மில்லியன் இரசிகர்கள் அந்தக் குறுமுன்னோட்டத்தைப் பார்த்துள்ளனர்.
ஜெயலலிதாவின் முதல் படமான வெண்ணிற ஆடையில் அவர் பாடி நடிக்கும் காட்சிகளுடன் தொடங்கும் முன்னோட்டம், அவர் பச்சை சேலை கட்டி 1991-இல் தமிழக முதல்வராக பெரும் கூட்டத்தின் முன்னர் நிற்பது போன்ற காட்சிகளுடன் முடிவடைகிறது.
எனினும், சமூக ஊடகங்களில் ஏராளமானோர், கங்கனா ரனாவுட்டைப் பார்க்க ஜெயலலிதா போல் இல்லை என கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘தலைவி’ படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: