கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை மாலையில் ‘டவுன் ஹால்’ பாணியில் மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் பெருவியூகத் திட்டம் மீதிலான விளக்கக் கூட்டத்தில் தலைநகர் சுற்று வட்டாரத்திலுள்ள சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என சுமார் 800 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
‘டவுன் ஹால்’ பாணி என்பது தலைவர்கள் பொதுமக்களுடன் நேரடியாக அமர்ந்து மக்களிடம் இருந்து பெறப்படும் கேள்விகளுக்கும், ஐயப்பாடுகளுக்கும் நேருக்கு நேர் பதிலளிப்பதும், ஒரு விவகாரம் தொடர்பில் நேரடியாக விளக்கம் தருவதுமான நடைமுறையாகும்.
நேற்றைய விளக்கக் கூட்டம் மஇகா தகவல் பிரிவின் ஏற்பாட்டில், அதன் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் குழுவினரின் முயற்சியில் நடைபெற்றது.
மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, செடிக் தலைமை இயக்குநர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் ஆகியோர் மேடையில் முன் அமர்ந்து பங்கேற்பாளர்களின் பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் வழங்கினர்.
மின்னல் வானொலியின் தெய்வீகன் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்தினார்.
மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் பெருவியூகத் திட்டத்தின் அண்மைய நடவடிக்கைகள், தாங்கள் எடுத்து வரும் புதிய திட்டங்கள் ஆகியவை குறித்தும் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கங்கள் தரப்பட்டன.
மாலை சுமார் 7.00 மணியளவில் தொடங்கி இரவு 10.00 மணிவரை கொஞ்சமும் கலைந்து செல்லாமல் நீண்ட இந்த விளக்கக் கூட்டத்தின் நிறைவுக்குப் பின்னர் டாக்டர் சுப்ரா பத்திரிக்கையாளர்களுடன் நடத்திய சந்திப்பில், விளக்கக் கூட்டம் குறித்த விவரங்களை வழங்கினார்.