கோலாலம்பூர்: கடந்த ஆண்டு கட்சித் தேர்தலின் போது ஊழல் மற்றும் இலஞ்ச வழக்குகளில் ஈடுபட்டதாக, பகாங்கைச் சேர்ந்த இரண்டு பிகேஆர் உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை உடனடியாக நீக்கப்பட்டனர்.
பிகேஆர் பெரா கிளைத் தலைவர் சாகாரியா அப்துல் ஹமீட் மற்றும் பகாங் மாநில பிகேஆர் உறுப்பினர் இஸ்மாயில் துல்ஹாடி ஆகியோரை நீக்கம் செய்ததாக பிகேஆர் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் டத்தோ அகமட் காசிம் தெரிவித்தார்.
பிகேஆர் ஒழுக்காற்றுக் குழுவுக்கு முன்னதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இருந்து கடந்த, அக்டோபர் 23-ஆம் தேதி தவறான நடத்தை குறித்து ஒரு கடிதத்தைப் பெற்றது குறித்து அவர் குறிப்பிட்டார்.
“ஒரு நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகும் (இன்றைய மாதாந்திர கூட்டத்தில்), தவறான நடத்தைக்கு அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்ஏஏசியிலிருந்து உறுதிப்படுத்தல் இருப்பதைக் கண்டறிந்தேன்.” என்று அவர் கூறினார்.
அரசாங்கத்திலும் அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஒழிக்க தொடர்ந்து பாடுபடும் ஒரு கட்சியாக பிகேஆர் இருக்கையில், இம்மாதிரியான விவகாரங்களில் கட்சி சமரசம் செய்யாது என்று இந்த நடவடிக்கையானது அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு தெளிவான செய்தியை வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.