கோலாலம்பூர் – மிக நீண்ட சட்டப் போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை (மே 22) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவிருக்கும் நிலையில் தனக்கென ஒரு புதிய வழக்கறிஞர் குழுவை நியமித்துள்ளார்.
அந்த வழக்கறிஞர் குழுவுக்கு முன்னாள் அரசாங்க தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) டத்தோ முகமட் யூசோப் சைனல் அபிடின் தலைமையேற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது வழக்கறிஞர் குழுவிலிருந்து ஹர்ப்பால் சிங் கிரேவால், என்.ஆதிமூலம் ஆகிய இருவரும் விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.
தாங்கள் நஜிப் வழக்கறிஞர் குழுவிலிருந்து நீக்கப்படவில்லை என்றும் புதிய குழு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தாங்களாகவே முன்வந்து விலகிக் கொண்டதாகவும் ஹர்ப்பால் சிங் அறிவித்துள்ளார்.