Home நாடு ஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு!

ஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு!

2357
0
SHARE
Ad

மாசாய் (ஜோகூர்) – பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வரும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றுவதிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

அனைத்துலக அளவில் ஆங்கில நாடகப் போட்டிகளை ஒவ்வோர் ஆண்டும் ‘டிரமதிச் ஆங்கில நாடக நிறுவனம்’ நடத்தி வருகிறது. மாணவர்களுக்கு நாடக வடிவிலான மனமகிழ் கல்வியைப் போதிக்கும் கல்வித் திட்டத்தைக் கொண்ட நிறுவனம் இது.

இந்த ஆண்டு இந்தப் போட்டி, மே 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் ஹாங்காங்கில் உள்ள ‘கௌ லூன்’ நகரில் நடைபெற உள்ளது.

#TamilSchoolmychoice

2003-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் துவங்கப் பட்டது. அனைத்துலக அளவில், பல மாணவர்களின் பேசும் ஆற்றல், தலைமைத்துவம், கலைத் திறன், பண்பு அப்போது முதல் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

இப்போட்டியில் ஹாங்காங், சீனா, மாக்காவ், தைவான், மலேசியா,  இந்தியா போன்ற நாடுகள் பங்கேற்கின்றன.

மலேசியாவிலிருந்து ஜோகூர் மாநிலத்திலுள்ள மாசாய் தமிழ்ப்பள்ளி இறுதி சுற்றுக்குத் தேர்வு பெற்றுள்ளது. போட்டியின் ஆரம்பத்தில் பல நாடுகளில் உள்ள பள்ளிகள் தாங்கள் நடித்த நாடகத்தைக் காணொளி வடிவத்தில் பதிவு செய்து நாடக நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். அடுத்த படியாக 8 சிறந்த நாடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதி கட்டமாக ஆகச் சிறந்த 3 நாடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்தத் இறுதிச் சுற்றில் மாசாய் தமிழ்ப்பள்ளி தேர்வு செய்யப் பட்டுள்ளது. இறுதி சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடக குழுவினர், நாடகத்தை நேரடியாக 15 நிமிடம் நடித்து அரங்கேற்ற வேண்டும். அதில் வெற்றியாளர்கள் நிர்ணயிக்கப் படுவர்.

மாசாய் தமிழ்ப் பள்ளியின் நாடகம்

மூன்று பிரிவுகளில் போட்டியிடும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி ஆகியவையே அந்த மூன்று பிரிவுகள்.

போட்டி நிகழ்ச்சியின் முடிவில் தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று நிலைகளில் பரிசுகள் வழங்கப்படும்.

தனித் தனியாகவும், குழு அடிப்படையிலும் பின்வரும் பிரிவுகளுக்கு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்:-

(i)       சிறந்த இயக்குநர்

(ii)      சிறந்த நடிகர்

(iii)      சிறந்த தயாரிப்பு (குழு)

(iv)     சிறந்த ஆடை அலங்காரம் (குழு)

(v)      சிறந்த அரங்க அமைப்பு

பயிற்சி மாணவர்கள் தேர்வு

இந்தப் போட்டிக்காக, பள்ளி அளவில் நடத்தப்பட்ட நாடகத் தேர்வு சுற்றில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டனர். அதில் 17 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை தொடர்ந்து சிறந்த வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சிகள் வழங்க ஜோகூர் மாநிலத்தின் கலாச்சார இலாகாவின் (Jabatan Kebudayaan Negeri Johor – JKKN) சிறப்பு பயிற்சியாளர் ஓத்மான் பயிற்சி வழங்கி வருகிறார்.

மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஹாங்காங் போட்டியில் அரங்கேற்றும் நாடக வடிவத்தின் சுருக்கம்

இக்கதை இராமாயணம் நாடகத்தைச் சார்ந்த கதையாகும். இந்த நாடகம் ஜாவாவில் நடிக்கப் படும் இராமாயண கதையாகும். ‘தங்க மான்’ என்ற தலைப்பைக் கொண்ட இக்கதையில் மொத்தம் 11 மாணவர்கள் நடிக்கின்றனர். பங்கு பெறும் மாணவர்கள் : திஷாம், சைலா, கிஷானிக்கா, ஷர்வின், தர்ஷினி, ஸ்ரீ ஷாலினி, நவிஷா, கெஷிகா, தருன், சகின், ஆகாஸ்.

ஆதரவு

இந்த நாடகத்திற்குக் கல்வித்துறை, ஜோகூர் மாநில கலாச்சார இலாகா (Jabatan Kebudayaan Negeri Johor -JKKN) ஆகியவற்றின் சிறந்த ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.

மேலும் இந்தப் போட்டிக்குப் பெற்றோரின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கதாகும். அவர்களின் ஒத்துழைப்பால் மாணவர்களைச் சிறந்த முறையில் பயிற்றுவிக்க முடிந்தது.

பள்ளித் தலைமை ஆசிரியரின் ஊக்கம்

மாசாய் தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி பெரியாச்சி பெருமாள், துணைத் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இந்த நாடகப் போட்டி தொடர்பில் முழு ஆதரவும் ஊக்கமும் வழங்கி உள்ளனர்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் முரளி மற்றும் உறுப்பினர்கள் வற்றாத ஆதரவு வழங்கியதோடு, பண உதவியும் தந்து இந்த நாடகம் தொடர்பான பணச்சுமையைக் குறைத்துள்ளனர்.

சவுத்தர்ன் வின்னர்ஸ் (Southern Winners) என்ற அரசு சாரா இயக்கத்தின் தலைவர் திரு நாதன் மற்றும் உறுப்பினர்கள் தங்களின் வற்றாத ஆதரவும், பண உதவிகளும் தந்து இந்த நாடகப் போட்டிக்கான பங்கேற்பில் பணச்சுமையைக் குறைத்துள்ளனர்.

மேலும் பள்ளி கட்டட வாரியத்தின் (LPS) தலைவர் திரு இளங்கோ மற்றும் உறுப்பினர்களும் சிறந்த முறையில் ஆதரவும், பண உதவிகளும் தந்து உதவியுள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத பல நல்லுள்ளங்களும் ஆதரவு வழங்கி இந்த நாடகத்தின் வெற்றிக்கு அடிப்படையாக உள்ளனர்.

மே 25-ஆம் தேதி ஹாங்காங் செல்லும் நாடகக் குழு

11 மாணவர்கள், 4 ஆசிரியர்கள் (ஆசிரியை கஸ்தூரி, திரு கணேஷ், ஆசிரியை சித்தி ஆய்ஷா, ஆசிரியை கலைவாணி)  1 பயிற்றுனர் (திரு ஓத்மான், JKKN), 12 பெற்றோர்கள், ஆகியோர் இந்த நாடகப் போட்டியில் கலந்து கொள்ள எதிர்வரும்  மே 25-ஆம் தேதி கோலாலம்பூரில் ஹாங்காங்குக்கு பயணத்தை மேற்கொள்கின்றனர்.

போட்டியை முடித்துக் கொண்டு மே 29-ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து நாடு திரும்புவர்.