Home தேர்தல்-14 அன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்!

அன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்!

1810
0
SHARE
Ad
பெர்சே 5 போராட்டத்தின்போது இரவில் சாலைத் தரையில் படுத்துறங்கிய முகமட் சாபு

கோலாலம்பூர் – இன்றிலிருந்து சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு 19 மே 2016-ஆம் நாள் தூய்மையான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும், நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகளோடு பெர்சே -5 வீதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பல எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, இரவு முழுவதும் சாலைகளில் படுத்துறங்கிப் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

அவ்வாறு எந்தவித அசௌகரியங்களும் காட்டாமல், அந்தப் போராட்டத்தின்போது மக்களோடு மக்களாக சாலையின் ஓரத்தில் படுத்துறங்கினார் அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு.

இன்று தற்காப்பு அமைச்சராக முகமட் சாபு
#TamilSchoolmychoice

காலங்கள் உருண்டோட இரண்டே ஆண்டுகளில் அரசியல் காட்சிகள் மாற – இதோ இன்று செவ்வாய்க்கிழமை (22 மே) தற்காப்பு அமைச்சராக நியமனம் பெற்று தனது முதல் நாள் பணிகளைத் தொடக்கியிருக்கிறார் முகமட் சாபு.

எப்போதும் மக்களோடு மக்களாக அரசியல் நடத்தி வந்த தனக்கு இந்த புதிய அமைச்சர் பதவி சற்று சங்கடத்தையும், நடுக்கத்தையும் தருகின்றது என்றும் இந்தப் பதவியில் பழகிக் கொள்ள தனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை என்றும் சிரிப்புடன் கூறியிருக்கிறார் முகமட் சாபு.

இருந்தாலும் மக்களோடு மக்களாகப் பழகும் முகமட் சாபு வழக்கம் என்றும் மாறாது என்றும் உறுதி கூறியிருக்கிறார், மாரா கல்லூரியில் சமையல் கலை கற்றுத் தேறிய இந்த அரசியல்வாதி.

சில மாதங்களுக்கு முன்னர் பிரச்சாரங்களின் நடுவில் துன் மகாதீர் தனது இல்லத்திற்கு வருகை தந்தபோது தானே முன்னின்று சமையலறையில் தனது கைப்பட மகாதீருக்கு உணவு சமைத்துப் பரிமாறிய வித்தியாசத் தலைவர் முகமட் சாபு!

-இரா.முத்தரசன்