புத்ரா ஜெயா – விவசாயத் துறை அமைச்சராக தனது பணிகளைத் தொடக்கியிருக்கும் பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் துணைத் தலைவரும், பூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான சாலாஹூடின் அயூப், சர்ச்சைக்குரிய கால்நடைத் தீவன விவகாரம் குறித்த விசாரணையை மீண்டும் தனது அமைச்சு தொடக்கும் என அறிவித்தார்.
விவசாயத் துறை அமைச்சு தொடக்கிய கால்நடை வளர்ப்புத் திட்டத்தில் என்.எப்.சி (NFC) எனப்படும் ‘நேஷனல் பீட்லோட் சென்டர்’ என்ற நிறுவனம் சம்பந்தப்பட்டு பல மில்லியன் ரிங்கிட் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
முகமட் சாலே இஸ்மாயில் என்.எப்.சி தலைவராக இருந்தார். இவர் அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் இஸ்மாயிலின் கணவராவார்.
என்.எப்.சி தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டாலும் யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மூடி மறைக்கப்பட்ட பல ஊழல் விவகாரங்களை வெளியே கொண்டுவருவதற்காகத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள் என்றும் கூறியிருக்கும் சாலாஹூடின், அடுத்த வாரத்தில் என்.எப்.சி விசாரணையை அமைச்சரவையின் அனுமதியுடன் மீண்டும் தொடக்குவோம் என்றும் அறிவித்தார்.