Home நாடு மோடியின் வருகைக்கு பி.எஸ்.எம். கண்டனம்

மோடியின் வருகைக்கு பி.எஸ்.எம். கண்டனம்

1147
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை மலேசியாவுக்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கண்டனம் தெரிவித்துள்ளது.

“அண்மையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது, தமிழ் நாடு காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி, 13 அப்பாவி மக்களின் உயிரைப் பலி வாங்கியுள்ளது. பல ஆண்டுகளாக இந்நிறுவனத்திற்கு எதிரான மக்களின் குரலுக்குத் தமிழ் நாடு அரசும் மத்திய அரசும் செவிசாய்க்காமல், ஒரு தனியார் முதலாளிக்கு முக்கியத்துவம் வழங்கி வந்துள்ளன. இலண்டனில் உள்ள வேதாந்த குழுமம் இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகித்து வருகிறது. 13 அப்பாவி மக்களின் உயிர் பலிக்குப் பின்னரே, உலகமும் அரசுகளும் இந்தத் தூத்துக்குடி மக்களின் 20 ஆண்டுகாலப் போராட்டத்தைத் தற்போது திரும்பி பார்க்கின்றன” என பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் நேற்று புதன்கிழமை (மே 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

1992-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்நிறுவனத்தை அமைக்க முற்பட்டபோது, அம்மாநில மக்களின் கடுமையான எதிர்ப்பினால் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1994-ல், தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு, இந்நிறுவனம் தூத்துக்குடியில் செயல்படத் தொடங்கியது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் சிவராஜன், பலமுறை நச்சுப்புகை வெளியேறியதைத் தொடர்ந்து, மக்கள் தொடுத்த வழக்கினால், 2008-ல் உயர்நீதிமன்றம் இந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டது என்றும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால், தனது பலத்தைக் கொண்டு, இப்பன்னாட்டு வணிக  நிறுவனம், உச்சநீதிமன்றத்தின் வழி, அத்தீர்ப்பை முறியடித்தது. சுற்றுச் சூழல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்கள் யாவும் மக்கள் நலன் காக்கத் தவறிவிட்டன என்பதனையே இது காட்டுகிறது என்றும் பிஎஸ்எம் சுட்டிக் காட்டியது.

சிவராஜன் ஆறுமுகம் – பிஎஸ்எம் தலைமைச் செயலாளர்

மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற இப்போக்கினால், இன்று தூத்துக்குடியில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 15,000 –க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒன்று திரண்டு நடத்திய இப்போராட்டத்தைக் கலைக்க, தமிழ்நாடு காவல்துறை இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் மீது, திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த மே 28-ம் நாள், ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்படுவதாகத் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இருப்பினும், இது ஒரு நிரந்தர தீர்வைக் கொண்டுவருமா என்ற சந்தேகம் மக்களிடையே உள்ளது. காரணம், இதற்கு முன்னர் இதுபோன்று பலமுறை சீல் வைக்கப்பட்டும், மீண்டும் அந்த ஆலை செயல்பட்ட வரலாறு உள்ளதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்திய அரசு இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழ் நாட்டிலிருந்து வெளியேற்றுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், இச்சம்பவத்துக்கு பொறுப்பான அனைத்து தரப்பினரும் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் பி.எஸ்.எம். தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டது.

இதன் தொடர்பில் தன் சொந்த நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல், அவர்களின் உயிரைக் காக்கத் தவறிய இந்தியப் பிரதமர் மோடியின் மலேசிய வருகையைப் பி.எஸ்.எம். கடுமையாக எதிர்க்கிறது என்றும் பிஎஸ்எம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.