புத்ரா ஜெயா – மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எம்.குலசேகரன் பிரதமர் துன் மகாதீரின் ஆற்றலும் அறிவுபூர்வமான சிந்தனைகளும் தனக்கு பிரமிப்பூட்டுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
“அமைச்சரான பின்னர் கடந்த மே 28-இல் எனது அமைச்சுப் பணிகள் குறித்து மகாதீரைத் தனியாகச் சந்தித்து எனது அமைச்சில் இதுவரை நான் மேற்கொண்டிருக்கும் மேம்பாடுகள் குறித்து விவாதித்தேன். அவரது கவனக் குவிப்பு, மன உறுதி, அவர் எனக்குத் தந்த மதிப்பு மிக்க ஆலோசனைகள் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்ததோடு, அவர் மீதான எனது மரியாதையையும் உயர்த்தியது” தனது டுவிட்டர் பக்கத்தில் குலசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

“நான் முதன் முதலாக 1997-இல் நாடாளுமன்றத்தில் நுழையும்போது அப்போது மகாதீர் பிரதமராக இருந்தார். நானோ எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்தேன். கால ஓட்டத்தில் அவரது அமைச்சரவையிலேயே அமைச்சராக அமர்ந்து பணியாற்றுவேன் என நான் கனவு கூட கண்டிருக்கவில்லை” என்றும் குலசேகரன் தனது பதிவில் கூறியிருக்கிறார்.