ஷா ஆலாம் – சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஒரு மாத கூடுதல் சம்பளம் சிறப்புத் தொகையாக வழங்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்தார்.
இந்தத் தொகை எதிர்வரும் ஜூன் 25-ஆம் தேதி வழங்கப்படும். இதன் மூலம் 17,109 மாநில அரசாங்க ஊழியர்கள் பயன்பெறுவர். மொத்தம் 31.2 மில்லியன் ரிங்கிட்டை சிலாங்கூர் அரசாங்கம் இதற்காக செலவிடும்.
அதே வேளையில் சிலாங்கூர் மாநிலத்திற்கான 7 மத்திய அரசாங்க இலாகாக்களின் 755 ஊழியர்களுக்கும் சிறப்புத் தொகையாக 1,000 ரிங்கிட் வழங்கப்படும். தாங்கள் சிலாங்கூர் மாநிலத்திற்கென பாடுபட்டாலும், மத்திய அரசாங்க ஊழியர்கள் என்ற காரணம் காட்டி, மாநில அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் வழங்ககப்படாமல், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக இந்தப் பிரிவு ஊழியர்கள் எப்போதும் முறையிட்டு வந்தனர். இவர்களின் மனக் குறையையும் தீர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்படுவதாக அஸ்மின் அலி அறிவித்தார்.
அரசாங்க சட்டத் துறை, காட்டுவள இலாகா, பொதுப் பணித் துறை, விவசாய இலாகா, சமூக நல இலாகா, ஷாரியா நீதித்துறை இலாகா, வடிகால், நீர்ப்பாசனத் துறை ஆகியவையே அந்த 7 மத்திய அரசாங்க இலாகாக்களாகும்.
பிரிவு 44-க்கும் மேல் உள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதி உதவியிலிருந்து 10 விழுக்காடு தேசிய நம்பிக்கை நிதிக்கு வழங்கப்படும் என்றும் அஸ்மின் அறிவித்தார். நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நிதிக்கு இந்தப் பிரிவு அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும் எனவும் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.