கோலாலம்பூர் – அனைத்துலக அளவில் மலேசியாவின் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) மிகவும் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களின் வரிசையில் 9-வது நிலையை அடைந்துள்ளது.
அதே வேளையில் தென் கிழக்கு ஆசியாவில் இரண்டாவது சக்தி வாய்ந்த கடப்பிதழாக மலேசியக் கடப்பிதழ் திகழ்கிறது.
உலகில் உள்ள எத்தனை நாடுகளுக்கு விசா என்ற குடிநுழைவுத் துறை அனுமதி இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்ற அம்சத்தின் அடிப்படையில் கடப்பிதழ்களின் தர நிர்ணயம் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் ஆகக் கடைசியான ஆய்வுகளின்படி விசா இன்றி 180 நாடுகளுக்கு மலேசியர்கள் தங்களின் கடப்பிதழ்களின் மூலம் பயணம் செய்ய முடியும்.
முதலிடத்தில் ஜப்பான்…
அனைத்துலக அளவில் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களின் வரிசையில் முதலிடத்தில் ஜப்பான் திகழ்கிறது. இதுநாள் வரை இந்தப் பெருமையைக் கொண்டிருந்த சிங்கப்பூர் தற்போது 2-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
2-வது இடத்தில் சிங்கப்பூரும் ஜெர்மனியும் இணைந்து இடம் பெற்றிருக்கின்றன.
கொசோவோ நாட்டிற்கு விசா இன்றி பயணம் செய்யும் தகுதியை சிங்கப்பூர் இழந்ததைத் தொடர்ந்து அந்நாடு 2-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஜப்பானியக் கடப்பிதழைக் கொண்டு 189 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும் என்ற முறையில் அந்நாடு இந்தத் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தை தென் கொரியா, பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன் ஆகிய 6 நாடுகள் பிடித்துள்ளன.
இந்த வரிசையில் ஈராக்கும், ஆப்கானிஸ்தானும் ஆகக் கடைசியான இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடப்பிதழ்களைக் கொண்டு சுமார் 30 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணம் செய்ய முடியும்.
அனைத்துலக குடிநுழைவு, குடியேற்றம், குடியுரிமை போன்றவற்றுக்கான ஆலோசனை நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் (Henley & Partners) அனைத்துலக வான்வழி போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இந்த கடப்பிதழ் தர வரிசையை நிர்ணயித்துள்ளது.