ஈப்போ – பேராக், ஈப்போவில் உள்ள மகிழம்பூ (மெங்களம்பு) தமிழ்ப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் நம்பிக்கை நிதிக்கு தாங்கள் சொந்தமாகச் சேகரித்த நூற்று ஐம்பது ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கி நாடே பாராட்டும் நற்பணியைச் செய்துள்ளார்கள்.
அரசாங்கத்தின் கடன் சுமையைக் குறைப்பதற்காக மலேசியப் பிரதமர் துன் மகாதீர் முகமது நம்பிக்கை நிதியை அறிவித்திருந்தார். அதற்காக நாட்டு மக்கள் மிகவும் ஆர்வத்தோடும் நாட்டுப் பற்றோடும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்தத் தருணத்தில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் ஐந்தாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலும் பெற்றோர்களின் அனுமதியோடும் சொந்தப் பணத்தைச் சேகரித்து நூற்று ஐம்பது ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கி தங்களின் அபரிமிதமான நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒரு தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் நாட்டின் நெருக்கடியை உணர்ந்துகொண்டு தாங்களாகவே முன்வந்து இப்படி ஒரு நற்செயலைச் செய்திருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
அப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு ஆசிரியர் திருமதி மலர்விழி நம்பிக்கை நிதி பற்றி கூறிய விளக்கங்களால் கவரப்பட்ட மாணவர்கள் தாங்களாகவே இந்த நிதியைச் சேகரித்துள்ளனர். பெற்றோர்கள் பள்ளிச் செலவுக்காகக் கொடுத்த பணத்தைச் சேர்த்து வைத்து நூற்று ஐம்பது ரிங்ட்டைத் திரட்டியுள்ளனர்.
பின்னர் இதைப் பற்றி வகுப்பாசிரியரிடம் தெரிவித்து அந்தத் தொகையைத் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர். தாங்கள் சேகரித்த தொகையை நம்பிக்கை நிதி வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து தலைமையாசிரியர் திருமதி மாரியம்மா அதற்கு ஆவன செய்து மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.
மாணவர்களின் இந்தச் செயலானது அவர்களின் தூய உள்ளத்தையும் உதவும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், மாணவர்களிடையே நாட்டுப் பற்றும் நாட்டு நலத்தின் மீது அக்கறையும் உள்ள மாணவர் சமுதாயம் உருவாகியுள்ளதை இது காட்டுவதாக அமைந்துள்ளது.