கோலாலம்பூர் – இவ்வார இறுதியில் புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதையடுத்து, வரும் ஜூன் 15 முதல் ஜூன் 17-ம் தேதி வரையில், குறிப்பிட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவாக பெர்லிஸ் அரண்மனையில் வழங்கப்படும் ‘அரச விருந்து’ பரிமாறப்படவிருக்கிறது.
இது குறித்து மலேசியா ஏர்லைன்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“பெர்லிஸ் பட்டத்து இளவரசர் பெர்லிஸ் சையத் ஃபைசுடின் புத்ரா ஜமாலுலாயில் மற்றும் துணைவியார் அளிக்கும் இவ்விருந்து, விமானத்தில் சுவையான பாரம்பரிய மலேசிய உணவுகளை அறிமுகம் செய்து வருவதில் மலேசியா ஏர்லைன்சின் செய்திருக்கும் மிகச் சிறந்த ஏற்பாடுகளில் ஒன்று.
“ஃபீப் கொர்மா பெர்லிஸ் என்ற மாட்டிறைச்சி உணவானது எம்எச்2 மற்றும் எம்எச்4 ஆகிய விமானங்களில் முதல் மற்றும் வர்த்தக வகுப்புகளில் கோலாலம்பூரில் இருந்து லண்டனுக்கு செல்லும் பயனிகளுக்கு வழங்கப்படவிருக்கிறது.
“அதேவேளையில் கோலாலம்பூரில் இருந்து ஜெட்டா செல்லும் எம்எச்150 விமானத்தில் வர்த்தக வகுப்பில் செல்லும் பயணிகளுக்கும், எம்எச்112 மற்றும் எம்எச்196 விமானங்களில் கோலாலம்பூரில் இருந்து தாக்கா செல்லும் விமானங்களில் வர்த்தக வகுப்பு பயணிகளுக்கும் வழங்கப்படவிருக்கிறது.
“மேலும், கோலாலம்பூரில் இருந்து சபா, சரவாக் மற்றும் ஆசியான் நாடுகளுக்குச் செல்லும் வர்த்தக வகுப்புப் பயணிகளும் இந்த சுவையான உணவைப் பெறுவார்கள்.” என மலேசியா ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
பெர்லிஸ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இஸ்தானா அராவில் வழங்கப்படும் உணவுகளில் இந்த ஃபீப் கொர்மா மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருப்பதாகவும் மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே, சிக்கன வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இதே உணவு ஆனால் மாட்டிறைச்சிக்குப் பதிலாக கோழி வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.