சென்னை, ஜனவரி 19 – சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது புதிய உள்நாட்டு முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங்குக்கு வெள்ளிக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது புதிய உள்நாட்டு முனையமும், விரிவாக்கப்பட்ட மற்றும் நவீனப்படுத்தப்பட்ட சர்வதேச இரண்டாவது முனையமும் திறப்பு விழாவுக்கு தயாராக இருப்பதை நான் அறிகிறேன். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அதனுடைய உட்கட்டமைப்பில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது வரவேற்கத்ததாகும்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணாவின் பெயர், சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்துக்கும், மற்றொரு முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பெயர், உள்நாட்டு முனையத்துக்கும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களைக் கவர்ந்த, சிறப்புமிக்கவரும், பெரும் பேருடன் விளங்கியவரும், தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றவரும், தமிழகத்தின் முதல்வர்களில் மிக முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவருமான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் பெயரை, சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது புதிய உள்நாட்டு முனையத்துக்குச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இந்த நடவடிக்கையானது, எம்.ஜி.ஆர். மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தும். எனவே, சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது புதிய உள்நாட்டு முனையத்தைத் திறப்பதற்கு முன்பாக அதற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டால் நன்றியுடையதாக இருக்கும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.