கோலாலம்பூர் – மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு மீண்டும் புதிதாக விசாரணை செய்யப்படவிருக்கும் நிலையில், மற்றொரு மர்ம வழக்கான தியோ பெங் ஹாக் மரணமும் மறுவிசாரணை செய்யப்படவிருக்கிறது.
இதனை ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் நேற்று புதன்கிழமை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
செய்தியாளரும், முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் இன் வோ ஹியான் வாவின் உதவியாளராகவும் பணியாற்றி வந்த தியோ, கடந்த 2009-ம் ஆண்டு, ஜூலை 16-ம் தேதி, ஷா ஆலம், பிளாசா மசலாமில், 14-வது மாடியில் உள்ள சிலாங்கூர் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அலுவலகத்தில் வழக்கு ஒன்றில் வாக்குமூலம் அளிப்பதற்காகச் சென்றார்.
அங்கு 11 மணி நேரம் விசாரணை செய்யப்பட்ட அவர், அதன் பின்னர் அக்கட்டிடத்தின் 5-வது மாடியில் இறந்த நிலையில் காணப்பட்டார்.
தியோ இறந்தது எப்படி? தற்கொலையா? கொலையா? என்பது மர்மமாக இருந்து வந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு, புத்ராஜெயா நீதிமன்றத்தில் இவ்வழக்கில் தீர்ப்பு வழக்கப்பட்டது.
தியோவை விசாரித்ததில் தாங்கள் காட்டிய அலட்சியப் போக்கை எம்ஏசிசி ஒப்புக் கொண்டதால், தியோவின் குடும்பத்தினருக்கு 600,000 ரிங்கிட் இழப்பீடும், வழக்கின் செலவாக 60,000 ரிங்கிட்டும் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.