சென்னை, மார்ச் 29-இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியே வந்துள்ளதால் இலங்கை தமிழர்களின் நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரின் ஆசைப்படி நாங்கள் மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம். இப்போது என்ன நடந்து விட்டது? ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதா? அல்லது அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இந்தியா திருத்தம் கொண்டு வந்து விட்டதா? அல்லது பாராளுமன்றத்தில் தான் தீர்மானம் எதுவும் கொண்டு வந்து விட்டார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியே வந்து விட்டது. இது ஒன்று தான் நடந்துள்ளது. ஆனால் இதற்காக கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் உச்ச கட்ட போர் இடம்பெற்ற 2009ஆண்டில் தி.மு.க. மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தாலும் இதே நிலை தான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வார்கள். அப்போதே வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், தி.மு.கழகத்தின் மீது பழியைப் போடுகின்ற ஒரு செயலே தவிர வேறல்ல என்பதுதான் உண்மை.
தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோதும், இல்லாதபோதும் ஈழத் தமிழர்களுக்காக இத்தனைப் போராட்டங்களையும் நடத்தியது அரசியல் ரீதியாகப் பல்வேறு இழப்புகளுக்கும் ஆளானது. ஆனால் ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது எத்தனை நாட்களாக அக்கறை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
16-4-2002 அன்று இதே சட்டசபையில் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டு வரவேண்டுமென்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். 17-1-2009 அன்று இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று ஜெயலலிதா கூறினார். இதையெல்லாம் மறந்துவிட்டு நான் இரட்டைவேடம் போடமாட்டேன் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.