Home நாடு கைரியின் ஆதரவு பெற்றவர் அம்னோ இளைஞர் பகுதியில் வெற்றி

கைரியின் ஆதரவு பெற்றவர் அம்னோ இளைஞர் பகுதியில் வெற்றி

1012
0
SHARE
Ad
ஷாரில் ஹம்டான்

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற அம்னோ இளைஞர், மகளிர் பகுதிகளுக்கான தேர்தலில் அம்னோ இளைஞர் பகுதித் துணைத் தலைவராக கைரி ஜமாலுடின் அணியைச் சேர்ந்த ஷாரில் ஹம்டான் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து தேசியத் தலைவருக்கான தேர்தலிலும் கைரி ஜமாலுடின் ஆதரவு அதிகரிக்கும் என சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதே வேளையில், கைரி ஜமாலுடின் நடப்பு இளைஞர் பகுதித் தலைவராக இருந்த காரணத்தால்தான் ஷாரில் ஹம்டானால் வெற்றி பெற முடிந்தது – மாறாக, தேசியத் தலைவர் தேர்தல் என்று வரும்போது மற்ற அம்னோ தலைவர்களிடையே இந்தத் தேர்தல் வெற்றி பிரதிபலிக்காது – என வேறு சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

அம்னோ இளைஞர் பகுதித் துணைத் தலைவர் பதவிக்கு துங்கு ரசாலி ஹம்சாவின் அணியின் சார்பில் பாஸ்டியன் ஓன் போட்டியிட்டார்.

அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் போட்டியில் யாருக்கு வெற்றி?

அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்கான தேர்தலில் யார் முன்னணி வகிக்கின்றனர் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்கு செனட்டர் கைருல் அஸ்வான் ஹருண் மற்றும் பிரதமர் துறையின் முன்னாள் துணையமைச்சர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் கைருல் அஸ்வான், கைரி ஜமாலுடின் அணியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றும் ஆனால் தேசியத் தலைவர் போட்டியாளர்களில் அஷ்ராப் யாருக்கு ஆதரவு என்பதை இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்றும் அம்னோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அம்னோ இளைஞர், மகளிர் பகுதிகளின் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்னோவின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும்.

அனைவராலும் உற்று கவனிக்கப்படும் தேசியத் தலைவருக்கான போட்டியில் ஐவர் போட்டியிட்டாலும், துங்கு ரசாலி, கைரி ஜமாலுடின், சாஹிட் ஹமிடி ஆகிய மூவருக்கிடையில்தான் போட்டி கடுமையாக இருக்கும்.

இந்த மூன்று போட்டியாளர்களுக்கும் இடையிலான பொது விவாதம் எதிர்வரும் ஜூன் 29 நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.