கோலாலம்பூர் – வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மலேசியா சிங்கப்பூருக்கு வழங்கும் தண்ணீர் பங்கீடு தொடர்பான உடன்படிக்கை மறு ஆய்வு செய்யப்படும் என துன் மகாதீர் அறிவித்திருக்கிறார்.
மகாதீருக்கும், சிங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான தூதரக உறவு என்பது எப்போதுமே சர்ச்சைக்குரியதாக இருந்து வந்திருக்கிறது. அதற்கேற்ப, பொதுத் தேர்தலில் மகாதீர் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி அமைத்தவுடன் உடனடியாக கோலாலம்பூர் வந்து மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங்.
எனினும், கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு இரயில் திட்டம் இரத்து செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்தார் மகாதீர்.
அதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (ஜூன் 25) சிங்கப்பூருக்கான தண்ணீர் விநியோக உடன்படிக்கை மறு ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கும் மகாதீர், “சிங்கப்பூர் மிகக் குறைந்த விலையில் மலேசியாவில் இருந்து சுத்திகரிக்கப்படாத தண்ணீரை வாங்கி, பின்னர் அதனைச் சுத்திகரித்து மிக அதிக விலைக்கு மலேசியாவிற்கு மறுபடியும் விற்பனை செய்கிறது” என்று கூறினார்.
இது கண்டிப்பாக ஒரு நாட்டுக்கு மட்டும் சார்பான – சாதகமான – ஒப்பந்தம் என்றும் மகாதீர் குறை கூறியிருக்கிறார்.