Home நாடு மகாதீரின் உதவியாளர் 10 மில்லியன் ரிங்கிட் பெற்றார் – மலேசியாகினியிடம் நஜிப் தகவல்!

மகாதீரின் உதவியாளர் 10 மில்லியன் ரிங்கிட் பெற்றார் – மலேசியாகினியிடம் நஜிப் தகவல்!

1409
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை மலேசியாகினி அலுவலகத்திற்கு அதிரடி வருகை புரிந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கினார்.

அதில் அவர் தனது வீடுகளில் கைப்பற்றப்பட்டிருக்கும் 1 பில்லியனுக்கும் அதிகமான ஆபரணங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் குறித்து சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

அவற்றில், கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்தில், டாக்டர் மகாதீரின் உதவியாளர்களில் ஒருவர் 10 மில்லியன் ரிங்கிட் நிதியை தன்னிடமிருந்து பெற்றுச் சென்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நிதி பெற்ற அந்நபர் மகாதீருக்கு நெருக்கமானவர் என்றும், பிரபல நீச்சர் வீரர் என்றும் நஜிப் விவரித்திருக்கிறார்.

10 மில்லியன் நிதியை அந்நபர் தனது ஜாலான் டூத்தா இல்லத்திற்கு வந்து பெற்றுச் சென்றதாகவும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், நஜிப், அந்நபரின் பெயரை மலேசியாகினியிடம் தெரிவித்துவிட்டாலும் கூட, சம்பந்தப்பட்ட நபரிடம் அது குறித்து கருத்துக் கேட்டிருப்பதால், மலேசியாகினி அவரது பெயரை வெளியிடாமல் வைத்திருக்கிறது.

இதனிடையே, தனது பெவிலியன் ரெசிடென்செஸ் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் 116 மில்லியன் ரொக்கம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நஜிப், “உங்களுக்குத் தெரியாது அது துல்லியமாக எவ்வளவு என்று, உங்களுக்குத் தெரியாது எத்தனை மக்கள் அதில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்று” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “(பெறப்பட்ட) நிதியை சரியாகப் பூஜ்ஜியமாக்க முடியாது. தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், தேர்தலுக்கு முன்பு, தேர்தலின் போது, தேர்தலுக்குப் பின் என செலவுகள் செய்து தான் ஆக வேண்டும்.

“மறந்துவிடாதீர்கள், நான் அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் தலைவராக இருந்தேன். அதில் 13 கூட்டணிக் கட்சிகள் இருந்தன. 3 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட அம்னோ போன்ற ஒரு பெரிய கட்சியை இயக்குவது மிகப் பெரிய செலவு தான். மேலும், பதிவுகளை எடுத்துப் பார்த்தால், மகாதீர் பதவி விலகும் போது, அவர் அம்னோவுக்குச் சொந்தமான 1.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்து, நிதிகளை தனக்கு அடுத்ததாக வந்த அப்துல்லா படாவியிடம் ஒப்படைத்தார்.

“அது பதிவில் இருக்கின்றது. எனவே அதனை நீங்கள் கருத்தில் கொள்ளும் போது, இது அந்த தொகையின் ஒரு பகுதியாகும்” என்று நஜிப் தெரிவித்திருக்கிறார்.

எனினும், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது 1.4 பில்லியன் ரிங்கிட்டை ரொக்கமாக வழங்கவில்லையே என மலேசியாகினி செய்தியாளர்கள் கேட்ட போது, “ஆமாம். ஆனால் தேர்தல் நேரத்தில் ரொக்கமாகவும் வழங்கப்பட்டது. கட்சிக்கு உடனடியாக பணம் தேவைப்படும் போது நீங்கள் வங்கிக் கணினி வழியாகச் செலுத்தமாட்டீர்கள்” என நஜிப் பதிலளித்திருக்கிறார்.

மேலும், 116 மில்லியன் ரிங்கிட் நிதி, 26 நாடுகளின் கரன்சிகளாகக் கண்டுபிடிக்கப்பட்டதே? என்ற கேள்விக்குப் பதிலளித்த நஜிப், தான் கடந்த 30 ஆண்டுகளாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வருவதாகவும், அங்கு அவர்கள் அளிக்கும் நிதி அந்நாடுகளில் பணத்திலேயே இருந்ததாகவும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.

அப்படியானால் கட்சிக்காக வழங்கப்பட்ட நிதி ஏன் பெவிலியன் ரெசிடென்சில் இருந்தது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “காரணம், எல்லாமே அவசரமாக நடந்தது. பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், ஸ்ரீபெர்டானா அலுவலகத்தில் இருந்தும் இரண்டு மணி நேரங்களில் வெளியேறச் சொன்னார்கள்.

“யோசித்துப் பாருங்கள், பிரதமர் அலுவலகத்தில், எனது முன்னோடிகளால் மிகப் பெரிய பாதுகாப்பு அறை கட்டப்பட்டிருந்தது. ஸ்ரீபெர்டானாவிலும் அப்படி ஒரு பாதுகாப்பு அறை உண்டு.

“நோக்கம் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அவர்களுக்குத் தெரியும். நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், நிதி அவசியம் தேவை. அதை எதிர்க்கட்சிகள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். அவர்களிடமும் நிதி இருக்கும்.

“இது பொதுமக்களுக்கு தெரியாத ஒன்று அல்ல. அதேவேளையில் இது விசித்திரமானது அல்ல என்பதும் எனக்குத் தெரியும். தேர்தல் நிதி குறித்து சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் மாற்றும் வரையில், இதற்கு முன்பு இது நடந்திருக்கிறது. அதுவே தொடர்கிறது” என்றும் நஜிப் தெரிவித்திருக்கிறார். 

மகாதீர் அம்னோ தலைவராக இருந்திருக்கிறார். இதே முறைகளைத் தான் பின்பற்றுவார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என்று நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே, நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆபரணங்களின் மதிப்பு 1 பில்லியனைத் தொட்டது என காவல் துறையின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின் இயக்குநர் அமார் சிங் நேற்று புதன்கிழமை அறிவித்தார்.

அமார் சிங்கின் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் மலேசியாகினி அலுவலகத்திற்குச் சென்ற நஜிப் இந்த நேர்காணலை வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.