Home நாடு 17 தூக்குத் தண்டனை கைதிகளின் ‘தலைகள்’ தப்பித்தன

17 தூக்குத் தண்டனை கைதிகளின் ‘தலைகள்’ தப்பித்தன

1384
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் இன்னும் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் அமுலில் இருக்கும் நிலையில், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு 17 கைதிகள் தங்களின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.

இவர்களின் நல்ல நேரம் – தற்போது புதிதாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம், மலேசியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதா இல்லையா என்பது குறித்து ஆராயவிருப்பதால், தற்சமயத்திற்கு தூக்குத் தண்டனை நிறைவைற்றுவதைத் தள்ளி வைத்திருப்பதாக துணைப் பிரதமர் வான் அசிசா அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து காத்திருக்கும் இந்த 17 பேர்களின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தூக்குத் தண்டனை கைதிகளில் மைய சர்ச்சையாக வலம் வருபவர்கள் அல்தான்துயா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சைருல் மற்றும் அசிலா ஆகிய இருவராவர்.

இவர்களில் அசிலா தனது தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்காக மலேசியாவில் காத்திருக்க, சைருல் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்.

சைருல் மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதி பிரதமர் மகாதீருக்கு அனுப்பியிருக்கிறார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்துக் கருத்துரைத்த அல்தான்துயாவின் குடும்ப வழக்கறிஞரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்ப்பால் சிங், மரண தண்டனை என்பது குற்றங்கள் குறைவதற்கு ஒரு வலுவான காரணியாக நிரூபிக்கப்படவில்லை என்பதால், அந்தத் தண்டனை முழுமையாக சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

எனினும் சைருலின் மரண தண்டனையை இரத்து செய்யும் நோக்கத்திற்காக மட்டும் இந்தத் தண்டனை இரத்து செய்யப்படக்கூடாது என வலியுறுத்தியிருக்கிறார்.