Home நாடு வேதமூர்த்தி முழு அமைச்சராகிறாரா?

வேதமூர்த்தி முழு அமைச்சராகிறாரா?

1795
0
SHARE
Ad
2013-இல் செனட்டராகப் பதவியேற்ற வேதமூர்த்தி, துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்

கோலாலம்பூர் – ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி நாளை செவ்வாய்க்கிழமை செனட்டராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் தொடர்ந்து முழு அமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற ஆரூடங்கள் ஊடகங்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு நியமிக்கப்பட்டால், மத்திய அரசாங்கத்தில் இந்திய சமூகத்தைச் சார்ந்த 4 முழு அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கும் புதிய வரலாறு தொடங்கும்.

2013 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை ஆதரித்த வேதமூர்த்தி, 13-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் துறையின் துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். எனினும், துணையமைச்சராக இருந்து கொண்டு தான் கொண்டுவர விரும்பிய உருமாற்றங்களை தேசிய முன்னணி அரசாங்கத்தில் கொண்டுவர முடியவில்லை எனக் கூறிய வேதமூர்த்தி பதவியேற்ற 6 மாதங்களில் தனது பொறுப்புகளில் இருந்து விலகினார்.

#TamilSchoolmychoice

14-வது பொதுத் தேர்தலில் துன் மகாதீர் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணிக்குத் தனது ஆதரவை வழங்கியதோடு, தீவிரமாகவும் பிரச்சாரம் செய்தார் வேதமூர்த்தி. எனினும் ஹிண்ட்ராப் கட்சி நம்பிக்கைக் கூட்டணியில் அதிகாரபூர்வமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மாறாக, நம்பிக்கைக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளில் ஒன்றாக ஹிண்ட்ராப் இணைத்துக் கொள்ளப்பட்டது.

நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்று மத்திய அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே வேதமூர்த்தி துணையமைச்சர் அல்லது அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்புத் துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கான பொறுப்பு அமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.